காவல்நிலையத்தில் Start.. Camera.. Action.. விஜயலட்சுமியால் நடிகர்களாக மாறிய காவலர்கள் ; போலீசார் நடத்திய நாடகம்!!

Author: Babu Lakshmanan
1 September 2023, 2:14 pm
Quick Share

பிரண்ட்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி. இந்த படத்தில் இவர் நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்தார். மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நிலையில், பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் ஒன்று அளித்தார். அதில், தன்னை சீமான் காதலித்த நிலையில், இருவரும் 2008ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருவரும் மாலை மாற்றி கொண்டதாகவும், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறியதாகவும் தெரிவித்து இருந்தார்.

மேலும், வேளச்சேரியில் உள்ள வீட்டில் இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்த நிலையில், பலமுறை தான் கர்ப்பம் அடைந்ததாகவும், அவரது வற்புறுத்தலால் கருவை கலைத்ததாகவும் புகார் கூறியிருந்தார். தன்னிடமிருந்து நகை, பணம் ஆகியவற்றை வாங்கி கொண்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாகவும் அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், அந்த வழக்கானது அப்படியே கிடப்பில் போடப்பட்டதாகவும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை விஜயலட்சுமி திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

இதுவரை இந்த புகார்களின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை விஜயலட்சுமி பெருநகர சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று தான் அளித்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதே புகார் மனு அதற்கான ஆதாரங்களையும் கொடுத்து பேட்டி அளித்திருந்தார்..

இந்த புகார் மனு மீது விசாரணை செய்ய கோயம்பேடு துணை கமிஷனருக்கு, சென்னை கமிஷனர் உத்தரவிட்ட நிலையில், நேற்று மாலை நடிகை விஜயலட்சுமி ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் கோயம்பேடு துணை கமிசனர் உமையாள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார். இரவு 10 மணி தாண்டியும், சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரனையின் போது, விஜயலட்சுமி காவல்நிலையத்திலிருந்து வெளியே வராமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் விசாரணையின் போது அவருக்கு சற்று மயக்கம் ஏற்பட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே காவல் நிலையிலிருந்து செல்வேன் என விஜயலட்சுமி அமர்ந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் விழி பிதுங்கி நின்றனர். பத்திரிகையாளர்களும் காவல் நிலையத்தை சூழ்ந்து இருந்ததால் நடிகை விஜயலட்சுமியை கமுக்கமாக அனுப்பி வைக்க போலீசார் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள்.

அப்போதுதான் நடிகை விஜயலட்சுமி போன்று ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் உருவ ஒற்றுமையுடைய பெண் போலீஸ் ஒருவரை தயார் செய்து, அவரது முகத்தை துப்பட்டாவால் மூடி அவசர அவசரமாக காரில் ஏற்றி செல்வதுபோல், காவல் நிலையத்திலிருந்து கார் வேகமாக சென்றது. ஆனால் அந்த காரில் எந்த பெண் போலீசும் செல்லாததால் சந்தேகம் எழும்பியது.

இருப்பினும் பத்திரிகையாளர்கள் காவல் நிலையத்தை விட்டு செல்லாமல் அங்கேயே உடும்பு பிடியாய் நின்ற நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல், போலீசார் மீண்டும் ஒரு நாடகத்தை நடத்தி பத்திரிகையாளர்களை அங்கிருந்து செல்வதற்கு ஏற்படும் செய்தனர். ஆனாலும் விடாப்பிடியாக பத்திரிகையாளர்கள் அங்கிருந்து செல்லாததால், இதற்கு மேலும் சமாளிக்க முடியாது, தூக்கம் கண்ணை கட்டுகிறது என்று தனியார் கார் ஒன்றை போலீஸ்காரர் எடுத்து வந்த நிலையில், சர்வ சாதாரணமாக நடிகை விஜயலட்சுமியை காரில் போலீசார் அழைத்து சென்றனர்.

நடிகை விஜயலட்சுமி போலீஸ் நிலையத்திலிருந்து சென்ற பிறகு பெண் போலீசை ஏற்றி கொண்டு வேகமாக சென்ற வாகனம், சாவகாசமாக காவல் நிலையத்தை வந்தடைந்தது. இதுகுறித்து துணை கமிஷனரிடம் கேட்டபோது, எந்தவித பதிலும் பேசாமல் வாயை மூடியபடி அமைதியாக காரில் ஏறி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விசாரணைக்கு வந்த நடிகை விஜயலட்சுமி விசாரணை முடிந்து அனுப்பி வைப்பதற்குள் ஒரு சினிமா பட காட்சியை போலீஸ் நிலைய வளாகத்தில் போலீசார் நடத்திய நாடகம், சினிமா காட்சிகளையே மிஞ்சுவது போல் சுவாரஸ்யமாகவும், சிரிப்பலையை ஏற்படுத்துவதாகவும் இருந்தது.

Views: - 271

0

0