மனைவி காணவில்லை என புகார் அளித்த இளைஞருக்கு போலீசார் மிரட்டல்? இளைஞரின் தந்தை மீது கொடூர தாக்குதல் : எஸ்.ஐ மீது பரபரப்பு புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2022, 9:42 pm
SI - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : மனைவியை காணவில்லை என புகாரளித்த வாலிபரின் தந்தையை தாக்கியதாக கூறி காவல் ஆய்வாளர் மீது மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருளானந்தன் மகன் அந்தோனிமுத்து (வயது -25). இவர் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் மகளிர் குழு கடன் வழங்கும் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறேன். எனக்கு விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தாலுகா, குன்னூர் சந்தையை சேர்ந்த உறவுக்காரர் தனசேகரன் என்பவரின் மகள் ஞானதீபாவுக்கும் கடந்த 14/02/2021 ஆம் தேதியன்று தூத்துக்குடி முத்தையாபுரத்தில் வைத்து திருமணம் நடந்தது.

அதைத்தொடர்ந்து பெற்றோருடன் வசித்து வருகிறோம். தற்போது ஞானதீபா 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் 15/06/2022 அன்று வேலைக்கு சென்று மாலை வீடு திரும்பியபோது எனது மனைவி ஞானதீபா வீட்டில் இல்லாததை தொடர்ந்து, உறவினர்கள் வீட்டில் தேடிச் சென்றேன்.

அங்கு இல்லாததால் கடந்த 16/06/2022-ந் தேதியன்று முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் எனது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தேன்.

அதன் பின்பு முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் ஜெயசீலன் எனக்கு போன் செய்து உன் மனைவி இங்குதான் இருக்கிறாள், உடனடியாக காவல் நிலையத்துக்கு வா என்று கூறினார். நான் எனது தாய், தந்தை மற்றும் உறவினர்களுடன் காவல் நிலையம் சென்றேன்.

அங்கு காவல் ஆய்வாளர் உன் மனைவி உன்னுடன் வாழ விரும்பவில்லை அவள் வேறொருடன் செல்ல விரும்புகிறாள். இனி அவள் விசயத்தில் தலையிடாதே என்று கூறி என்னை மிரட்டினார். அப்பொழுது எனது தந்தை கேள்வி கேட்டதால் அவரை அடித்து கீழே தள்ளி விட்டார். இதில் காயமடைந்த எனது தந்தை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

எனவே எனது தந்தையை தாக்கிய முத்தையாபுரம் காவல் ஆய்வாளர் ஜெயசீலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் எனது மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அந்த மனுவில் கூறியுள்ளார்.

Views: - 327

0

0