கரும்பு டன்னுக்கு ரூ.4000 தரோம்-னு சொன்னீங்களே, என்னாச்சு..? ஏமாறப்போவது திமுக அரசு தான்… பிஆர் பாண்டியன் எச்சரிக்கை..!!

Author: Babu Lakshmanan
20 February 2024, 6:23 pm
Quick Share

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ 2500 உடனடியாக வழங்குவோம் என்று அறிவித்தது, தற்போது பட்ஜெட்டில் இடம் பெறவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது என்று தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்பிஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னாா்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தாா். அப்போது அவர் பேசியதாவது :- தமிழ்நாடு அரசு 4வது ஆண்டாக வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது வரவேற்கக்கூடியதாகும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம்நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2500 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக வழங்குவோம் என்று 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அறிவித்தது. அது குறித்து இன்று வரையிலும் வாய் திறக்காமல் இருப்பதும், பட்ஜெட்டை மட்டுமே மிகைப்படுத்தி பேசுவதும் விவசாயிகளை ஏமாற்ற முடியாது. அரசு தான் ஏமாறப் போகிறது.

எந்தெந்த துறைகளின் கீழ் எவ்வளவு நிதி பெறப்படுகிறது? எந்த வகையில் பட்ஜெட்டுக்கான நிதி முதலீடுகள் ஈர்க்கப்படுகிறது என்பது குறித்து இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. எனவே, ஏதோ விளம்பரத்திற்காக பட்ஜெட்டை பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல. இதனால் விவசாயத்திற்கு எந்த பயனும் அளிக்காது. குறிப்பாக, காவிரி -வைகை, குண்டாறு இணைப்பு திட்டம். ஏரிகள் பாசன வடிகால்கள் மற்றும் ஆறுகள் தூர்வாருவதற்கான சிறப்பு திட்டங்கள் குறித்து எதுவும் இடம் பெறவில்லை. இதனால் இந்த பட்ஜெட் மீது விவசாயிகள் நம்பிக்கை இழந்து உள்ளனர்.

அதே நேரத்தில் மண்ணுயிர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் அறிமுகப்படுத்தி இருப்பதை பாராட்டுகிறோம். அதே நேரத்தில், உற்பத்திக்கான தொழில் நுட்பங்களை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கப்படுகிறதே தவிர, தேவையான அளவு தேவைக்கேற்ப ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து குறைபாடு நீடித்துக் கொண்டிருக்கிறது.

கட்டுக்கடங்காத பூச்சிக்கொல்லி மருந்துகள் களைக்கொல்லி போன்றவை விற்பனையை தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மனிதருக்கு மருத்துவர்கள் சான்று இன்றி மருந்து பெற முடியாது. ஆனால் விவசாயிகளுக்கு கட்டுக்கடங்காத பூச்சிக் கொள்ளி மருந்துகளை விற்பனை கடைகள் தன் விருப்பத்திற்கு விற்பனை செய்து கொள்கின்றன.

இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் மண்ணுயிர் பாதுகாப்பு பொருத்தமற்றது. பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் அறிவிப்புக்கு நிதி ஒதுக்கீடு இல்லாமல் விளம்பரமாகவே தொடர்கிறது. மத்திய அரசு இரசாயன உர பயன்பாட்டிற்கு கடந்தாண்டு வழங்கி வந்த மானிய தொகை ரூபாய் 2.60 லட்சம் கோடியிலிருந்து 1.60 லட்சம் கோடியாக குறைத்துவிட்டது.

இந்நிலையில் உர தட்டுப்பாடும், விலையற்றமும் எதிர்காலத்தில் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கு மாற்றாக இயற்கை உர உற்பத்தியையும், பயன்பாட்டையும் ஊக்கப்படுத்த வேண்டும் என மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் நினைப்பது தவறில்லை. ஆனால் இதனை ஈடு செய்கிற வகையில் இயற்கை உர விற்பனைக்கும் உற்பத்திக்கும் உரிய மானிய திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை, என தெரிவித்தாா்.

Views: - 261

0

0