சரக்கு வேன் மோதியதில் தாறுமாறாக ஓடிய கார்… தனியார் வங்கி ஊழியர் உள்பட 4 பேரின் உயிரை பறித்த கோர சம்பவம்!!

Author: Babu Lakshmanan
5 July 2023, 4:01 pm
Quick Share

புதுக்கோட்டை ; விராலிமலை அருகே பயணியர் நிழற்குடையில் மோதி கார் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் உறையூரை சேர்ந்தவர் முரளி. இவர் தில்லை நகரில் உள்ள தனியார் வங்கியில் கார் லோன் பிரதிநிதியாக வேலை செய்து வந்துள்ளார். அதே வங்கியில் விவசாய கடன் மண்டல மேலாளராக பணி புரியும் ரவிக்குமாருடன் நேற்று வாடகை கார் ஒன்றில் திருச்சியில் இருந்து தென்காசி சென்று உள்ளனர்.

தென்காசியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் அடகு வைத்திருக்கும் நகையை மீட்பதற்காக திருச்சி கல்லுக்குழியில் கணேஷ் குமார் என்பவரின் வாடகை டாக்ஸி மூலம் சென்ற நிலையில், அங்கு தென்காசியில் நகை மீட்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மீண்டும் ஊர் திரும்பிய முரளி மற்றும் ரவிக்குமார் தென்காசி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அவரது நண்பர் ராஜ்குமார் ஆகியோரை காரில் அழைத்துக் கொண்டு திருச்சி நோக்கி பயணித்துள்ளனர்.

இன்று காலை கார் மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லஞ்சமேடு என்ற பகுதிக்கு சென்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மினி சரக்கு வேனில் எதிர்பாராதவிதமாக மோதி உள்ளது. இதில் கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த பயணியர் நிழற்குடையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் முழுவதும் சேதம் அடைந்தது.

காரில் சென்ற ரவிக்குமார், கார் ஓட்டுநர் கணேஷ்குமார், தென்காசி சுரேஷ் மற்றும் சுரேஷின் நண்பர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயத்துடன் முரளி மீட்கப்பட்ட நிலையில், மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து நிகழ்வு இடத்துக்கு சென்ற போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள விராலிமலை போலீசார் விபத்துக்கு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 252

0

0