மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன் வீட்டிலும் ED ரெய்டு ; கூட்டாளி வீடுகளில் சோதனை… புதுக்கோட்டையில் பரபரப்பு!

Author: Babu Lakshmanan
25 November 2023, 2:51 pm
Quick Share

புதுக்கோட்டையில் மணல் குவாரி நடத்தி வரும் தொழிலதிபர் ராமச்சந்திரன் மற்றும் அவரது தொழில் முறை கூட்டாளியான கரிகாலன் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்றாவது முறையாக சோதனை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டையை முத்துப்பட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் கடந்த அதிமுக ஆட்சி காலத்திலும் சரி, தற்போது திமுக ஆட்சி காலத்தில் சரி, மணல் குவாரிகளை எடுத்து நடத்தி வருகிறார். இது தவிர முன்னாள் அமைச்சர்கள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் ஆகியோருடன் இணைந்து மிகப்பெரிய அளவில் சோலார் பவர் பிளான்ட் பல்வேறு அரசு ஒப்பந்தங்கள் எடுத்து பணிகளை செய்து வருகிறார்.

ஏற்கனவே, கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, எஸ் ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் மற்றும் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். அந்த வழக்கு இன்னும் நடைபெற்று வருகிறது.

திமுக ஆட்சி வந்த பிறகும் அவர் தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளையும், பல்வேறு ஒப்பந்தங்களையும் எடுத்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் தொழிலதிபர் ராமச்சந்திரன் தொடர்படைய அவருடைய கார்ப்பரேட் அலுவலகம், கிரானைட் குவாரி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், ஒவ்வொரு இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்ட பொழுது, பாதுகாப்பிற்காக துப்பாக்கி இந்திய சி ஆர் பி எப் வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தமிழக முழுவதும் உள்ள மணல் குவாரிகளில் விற்பனை செய்வதில் வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோதமான பண பரிமாற்றம் தொடர்பாக தற்போது மூன்றாவது தடவையாக சோதனை நடைபெற்று வருவதாகவும், அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு முறை நடைபெற்ற சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள் தொடர்பாக இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு சோதனையின் அடிப்படையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற சோதனையில் சிக்கிய ஆவணங்கள் குறித்த அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறதா..? அல்லது வேறு ஏதேனும் புது வழக்கு, அதாவது தற்போது சட்ட விரோத பண பரிமாற்றம் மற்றும் மணல் விற்பனை தொடர்பான வரி ஏய்ப்பு தொடர்பாக இந்த சோதனையானது நடைபெற்று வருகிறதா..? என்ற தகவல் இன்னும் சிறிது நேரத்தில் தெரியவரும்.

கடந்த செப்டம்பர் மாதம் மணல் குவாரி தொழிலதிபர் ராமச்சந்திரன் சொந்தமான நிஜாம் காலனியில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் முத்துப்பட்டினம் கிராமத்தில் உள்ள அவரது வீடு, அவரது தொழில் முறை நண்பரான கறம்பக்குடியில் உள்ள கரிகாலன் வீடு மற்றும் நிஜாம் காலனியில் உள்ள தொழில் முறை நண்பரான மணிவண்ணன் வீடு மற்றும் தொழிலதிபர் ராமச்சந்திரனின் நண்பரான அரசு ஒப்பந்ததாரர் கர்ணன் வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்க துறையினர் மூன்று நாட்களாக சோதனை மேற்கொண்டு பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் தற்பொழுது மீண்டும் தொழிலதிபர் ராமச்சந்திரன் உடைய நண்பர்கள் வீடுகளில் துறையினர் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்போடு மீண்டும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் மணல் குவாரி நடத்திவரும் தொழிலதிபர் ராமச்சந்திரன் மற்றும் அவரது கூட்டாளியான கரிகாலன், தொடர்புடைய நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தொடர்ந்து அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

குறிப்பாக திமுகவில் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அதிமுகவில் உள்ள முக்கிய தலைவர்களிடையே நெருக்கமாக பழகி வந்த தொழிலதிபர் ராமச்சந்திரன் மற்றும் அவரது கூட்டாளியான கரிகாலன் ஆகியோரது வீடுகளில் தொடர்ந்து அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 358

0

0