புரட்டாசி சனிக்கிழமை : காரமடை அரங்கனை வழிபட முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம்.. வாசலில் நின்று தரிசனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2021, 1:25 pm
Ranaganthan Temple -Updatenews360
Quick Share

கோவை : கொரோனா பரவல் காரணமாக புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவிலில் பொது மக்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கோவை மாவட்டம் காரமடையில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ அரங்கநாதசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ஆண்டு தோறும் புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் மாசிமகத்திருத்தேர் பெருந்திருவிழா மக்கள் பெருந்திரளாக கூடி அரங்கனை தரிசித்து செல்வது வழக்கம்.

கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக வழிபாட்டுத்தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை பொதுமக்கள் வழிபட தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டார்.

இதனால் வழிபாட்டுத்தலங்களில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு காரமடை அருள்மிகு ஸ்ரீ அரங்கநாதசுவாமி திருக்கோவில் வாசல் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

மேலும், தாசர்களுக்கு அரிசி,பருப்பு மற்றும் காய்கறி பொருட்களை வழங்கியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். தாசர்களுக்கு இவ்வாறு அரிசி, பருப்பு, காய்கறிகளை வழங்கி பின்னர் அவர்களிடமிருந்து பெற்றுச்செல்லும் பொருட்களை வைத்து சமைத்து சாப்பிட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

இந்நிலையில் புரட்டாசி முதல் சனிக்கிழமையன்று அரங்கனை வழிபட வந்தவர்கள் கோவில் வாசல் முன்பு கற்பூரம் ஏந்தி வழிபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பக்தரான சிறுமுகையினை சேர்ந்த நந்தினி கூறுகையில் பக்தர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்தும், சமூக இடைவெளியினை பின்பற்றியும், கிருமி நாசினி தெளித்தும் அரங்கனை தரிசிக்க தயாராக உள்ளதாகவும், ஆதலால்,மாவட்ட நிர்வாகம் அரங்கனை நேரில் சந்தித்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற கோவிலை திறந்தால் நன்றாக இருக்கும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

காரமடை அருள்மிகு ஸ்ரீ அரங்கநாத சுவாமி திருக்கோவில் செயல் அலுவலர் லோகநாதன் தலைமையில் கோவில் பணியாளர்கள் பலர் கோவிலின் 3 நடைகளிலும் பக்தர்கள் கோவிலின் உள்ளே வராமல் தடுக்குமல பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 334

0

0