நிலச்சரிவில் சிக்கி சிதைந்து போன உடல்கள்.! உறவினர்கள் கோரிக்கை.!!

10 August 2020, 12:14 pm
Kvp Kerala - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் கோவில்பட்டியை சேர்நத்வர்களின் உடல்கள் சிதைத்து காணப்பட்டதுள்ளதால் உரிய முறையில் அடக்கம் செய்ய வேண்டும் அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கேரளாவில் கடந்த சில நாட்களாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. இம்மாவட்டம் பெரும்பாலும் மலைப்பகுதி என்பதால் கடந்த வியாழக்கிழமை 5க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டதில் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் முற்றிலுமாக சேதமடைந்து மண்ணுக்கடியில் புதைந்திருக்கலாம் என்று அச்சப்படுகிறது. அந்த குடியிருப்புகளில் இருந்த 70 பேர் வரை மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் 43 உடல்கள் தற்பொழுது வரை மீட்கப்பட்டுள்ளதாக கேரளா அரசு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. மற்றவர்களை தேடும் பணியில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புப்படைவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் பாரதி நகரை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வந்தனர். அங்குள்ள தேயிலை தோட்டங்களில் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வந்துள்ளனர். மீட்கப்பட்ட உடல்களில் 18 பேர் கயத்தார் பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மற்றவர்களின் நிலைமை என்னவென்று தெரியமால் இருப்பதால் கயத்தார் பாரதி நகர் பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு இங்குள்ள அவர்களது உறவினர் உயிரிழந்தவர்களின் உடல்களை பார்க்க கேரளா சென்றனர். தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூவின் முயற்சியினால் இ.பாஸ் பெற்று சென்றனர். கேரளா மாநிலம் சின்னார் சோதனை சாவடியில் இவர்களை மறித்து செல்லுவதற்கு தடை விதித்தனர். இதனால் நேற்று காலை 6மணி முதல் மதியம் 12 மணி வரை அவர்கள் அங்கு காத்திருக்கும் நிலை இருந்தது. நீண்ட போராட்டம் மற்றும் தமிழக அரசின் முயற்சிக்கு பின் ஒரு குடும்பத்திற்கு ஒருவர் என்ற வீதம் 14பேர் மட்டுமே உடல்களை பார்க்க அனுமதிக்கப்பட்டனர்.

உறவினர்கள் உடல்களை பார்த்த பின்னர் நேற்று மாலை 26 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. இதையெடுத்து உறவினர்கள் அனைவரும் இன்று கயத்தாருக்கு திரும்பியுள்ளனர். தங்களால் உடல்களை முழுமையாக பார்க்க முடியவில்லை என்றும், உடல்கள் சிதைந்த நிலையில் இருப்பதாகவும், அங்கு செல்வதற்கு மிகுந்த சிரமப்பட்டதாகவும், கேரளா அரசு உடல்களை உரிய மரியாதை கொடுத்து அடக்கம் செய்ய வேண்டும் என்றும், ஒரே இடத்தில் அடக்கம் செய்யமால் தனித்தனியாக அடக்கம் செய்ய வேண்டும்.

அனாதைகள் போன்று உடல் அடக்கம் செய்வது மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்தனர். பலர் குடும்பங்களை இழந்து இருப்பதால் அந்த குழந்தைகளுக்கு கல்வி செலவு மற்றும் உயிரோடு இருப்பவர்களுக்கு வாழ்வாதரத்திற்காக அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார், தேவையான உதவிகளை அரசு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

Views: - 27

0

0