பாஜகவின் வாக்குச்சாவடியாக மாறிய ராமர் கோவில்.. தலைமை பூசாரியாக பிரதமர் மோடி : சிபிஎம் மூத்த தலைவர் கிண்டல்!

Author: Udayachandran RadhaKrishnan
24 February 2024, 6:30 pm
Parakash karat
Quick Share

பாஜகவின் வாக்குச்சாவடியாக மாறிய ராமர் கோவில்.. தலைமை பூசாரியாக பிரதமர் மோடி : சிபிஎம் மூத்த தலைவர் கிண்டல்!

பாஜகவின் வாக்குச்சாவடியாக மாறிப்போன ராமர் கோவில், அதன் தலைமை பூசாரியான மாறிப்போன பிரதமர் மோடி என்று கிண்டலும் கேலியுமாக சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் பேசியுள்ளார்.

அது பற்றிய விவரம் வருமாறு, நாடாளுமன்ற 18வது மக்களவை தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அளவிலான சிறப்பு பயிற்சி பட்டறை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தலும் அரசியல் சிந்தாந்த சவால்களும், கடமைகளும் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த பயிற்சிபட்டறையில் கலந்து கொண்ட பிரகாஷ்காரத் அரசியல் சித்தாந்த களத்தில் பாஜகவை முறியடிப்போம் என்ற தலைப்பில் பேசியதாவது.
இந்த பயிற்சி பட்டறை நாம் எதிர் நோக்குகிற சவாலை நாம் எப்படி வெற்றிகரமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக நாம் கூடியிருக்கிறோம்.

18வது மக்களவை தேர்தலை சந்திக்கக் கூடிய சூழல் இது. ஏப்ரல் துவக்கத்தில் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தல் பத்தோடு பதினொன்றாக நாம் பார்க்கக் கூடாது. ஒரு சாதாரண காலத்தில் நடைபெறுகிற தேர்தலாக இதை பார்க்கக்கூடாது. அடுத்து ஆட்சியை பிடிக்கப் போவது யார்? எந்த அரசு ஆட்சிக்கு வரும் என்று சாதாரணமாக பேசுவதற்கான விசயமாக இந்த தேர்தலை பார்க்க முடியாது.

நாட்டின் ஜனநாயகம் கேள்விக்குள்ளாகும், இன்றைக்கு இந்த நாடு மதசார்ப்பற்ற ஜனநாயக குடியரசாக உள்ளது. எனவே இந்த தேர்தலுக்கு பிறகு அது நீடிக்குமா? நமது நாட்டின் மதசார்பின்மை மற்றும் ஜனநாயகத்தின் எதிர்காலம் என்ன ? என்கிற கேள்விகளை தீர்மானிக்கக்கூடிய தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்.

அதே போல இந்தியாவினுடைய அரசியல் சாசனம், அதன் எதிர்காலம் என்ன? அது இப்படியே நீடிக்குமா? என்பன போன்ற கேள்விகளுக்கு பதில்களை சொல்லக்கூடிய இந்த 18வது மக்களவைத் தேர்தலை நாம் பார்க்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக மோடி தலைமையின் கீழ் பாஜக இந்தியாவை ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த 10 ஆண்டுகளில் ஏராளமான பிரச்சனைகளை, கஷ்டங்களை நாட்டு மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.

பாஜக அரசாங்கம் ஒரு விசயத்தை மிக தெளிவாக தங்களது 10 ஆண்டுகால ஆட்சியின் மூலமாக உணர்த்தியிருக்கிறது. அது என்ன? இந்திய குடியரசினுடைய தன்மையை மாற்றுவோம் என்ற அறிவிப்பைத்தான் கடந்த 10 ஆண்டுகளாக அவர்களது நடவடிக்கைகள் மூலமாக நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.

ஒரு இந்து ராஷ்டிரத்தை கட்டமைக்க வேண்டும் என்பது தான் எங்களுடைய நோக்கம் என்பதையும் தெளிவாக பகிரங்கமாக சொல்லியிருக்கிறார்கள். இந்து ராஷ்டிரம் என்பது என்ன? இன்றைக்கு நாம் எல்லோரும் விரும்புகிற மதசார்பற்ற ஜனநாயக குடியரசுக்கு நேர் எதிரான விசயம் தான் இந்து ராஷ்டிரம்.

அதை கொண்டு வருவதற்காக இந்த தேர்தலை அவர்கள் சந்திக்க இருக்கிறார்கள். எனவே இந்த தேர்தல் இந்திய தேசத்தினுடைய எதிர்காலம் குறித்து மதசார்பற்ற ஜனநாயக குடியரசின் எதிர்காலம் குறித்து இந்திய அரசியல் சாசனத்தின் எதிர்காலம் குறித்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது தான் நம் முன்னால் இருக்கிற சவால்.

இந்த தேர்தலில் நாம் கடுமையான பணிகளை ஆற்றி பிஜேபியை தோற்கடிக்க வேண்டும். பிஜேபி ஆர்.எஸ்.எஸ். அரசாங்கம் வரவிடாமல் தடுத்து அவர்கள் நினைக்கிற இந்து ராஷ்டிரத்தை கட்டமைக்க விடாமல் தடுப்பது என்பது தான். இந்த தேர்தலைப் பொருத்தவரை தேர்தல் பணிகளை பொருத்தவரை நாம் எதிர் நோக்குகிற மிகப் பெரிய சவால்.

நாட்டின் பல்வேறு உரிமைகள் மீது கடுமையான தாக்குதலை மோடி அரசாங்கம் கடந்த 10 ஆண்டுகளாக தொடுத்து வந்துள்ளது. அதே போல இந்துத்துவ வகுப்பு வாத நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்காக இந்த 10 ஆண்டுகாலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்து கூட்டாட்சி கோட்பாடு மிதிக்கப்படுகிறது. மாநில உரிமைகள் நசுக்கப்படுகின்றன.

ஒட்டுமொத்தத்தில் ஒன்றிய பாஜக அரசு சகல விதமான அதிகாரங்களையும் பெற்ற ஒரு சக்திமிக்க வலிமையான அரசாங்கமாக மாறுவதையும், மாநில அரசுகளின் சகலவிதமான உரிமைகளையும் மறுத்து அவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியிலும் முட்டுக்கட்டை போட்டு அவர்களை நிதி பட்டினியில் தள்ளுகிற இந்த ஏற்பாட்டை வெவ்வேறு வடிவங்களில் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இந்திய அரசியல் சாசனத்தினுடைய அடிப்படையான தூண்கள் என்று சொன்னால் ஜனநாயகம், மதசார்பின்மை, கூட்டாட்சி கோட்பாடுகளை சொல்ல முடியும். இந்த 3 தூண்களுமே பல்வேறு கட்டங்களில் பல்வேறு வடிவங்களில் தகர்க்கப்பட்டு வருகின்றன. தாக்கப்பட்டு வருகின்றன.

நாட்டின் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் எந்த வடிவத்தில் நடைபெறுகிறது என்றால் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் பயங்கரமாக ஒடுக்கப்படுகிறார்கள். எதிர்கட்சி எம்.பி.க்கள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக கூறுவதற்கு ஒன்றிய அரசை விமர்ச்சிப்பதற்கு, பிரதமரை விமர்ச்சிப்பதற்கு மாற்றுக் கருத்துக்களை சொல்வதற்கான உரிமைகள் மறுக்கப்படுகிறது.

ஒரு வேளை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எங்களுக்கு இந்த உரிமை இருக்கிறது. நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களுக்கு வாய்ப்பு வேண்டும் என்பதை வலியுறுத்தினால் உடனடியாக அவர்கள் இடை நீக்கம் செய்யப்படுகிறார்கள்.

கடந்த குளிர்காலக்கூட்டத்தொடரில் 146 எதிர்கட்சி எம்.பி.க்கள் இடை நீக்கம் செய்யப்படுகிறார்கள். மொத்தத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது வெட்டிச்சுருக்கப்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

அதே போல நாட்டினுடைய தலைவிதியை தலைவிதியை தீர்மானிக்கக்கூடிய முக்கியமான சட்டங்கள் எல்லாம், மசோதாக்கள் எல்லாம் முறையான விவாதம் இல்லாமலே நாடாளுமன்றத்தில் அதிரடியாக நிறைவேற்றப்படுகின்றன. சில நேரம் நாடாளுமன்றத்தில் விவாதிப்பதற்கு நேரமில்லை என்று சொன்னால், நாடாளுமன்றத்தில் துறை ரீதியான நிலைக்குழுக்கள், மற்ற பல கமிட்டிகள் உள்ளன.

அந்த கமிட்டிகளுக்கு இந்த விவாதங்களை ஒப்படைப்பார்கள். அதைக்கூட இந்த அரசு செய்ய மறுக்கிறது. எனவே. நாடாளுமன்றத்தில் உள்ள பல்வேறு குழுக்களுக்கும் விவாதத்தை மறுத்து எதிர்கட்சி எம்.பி.க்கள் தங்களுடைய கருத்துக்களை சொல்வதற்கான கதவுகளையும் அடைத்து அதிரடியாக அடக்குமுறை சட்டங்கள் நாடாளுமன்றத்திலே நிறைவேற்றப்படுகின்றன. எனவே நாடாளுமன்ற ஜனநாயகத்தினுடைய தலையெழுத்தை இப்படியெல்லாம் இந்த அரசாங்கம் மாற்றிக்கொண்டிருக்கிறது.

அடுத்து நம்மை போன்ற குடிமக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்புடைய விசயத்தில் பல்வேறு தாக்குதல் வருகின்றன. ஏராளமான கருப்புச்சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. யு.எ.பி.ஏ. போன்ற ஆள் தூக்கிச் சட்டங்கள் வந்துள்ளன. இதில் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம், டிரையல் இல்லாமல் விசாரணை இல்லாமல், ஜாமீன் இல்லாமல் வருடக்கணக்காக ஒருவரை சிறையில் அடைக்க முடியும்.

இப்படிப்பட்ட சட்டங்களைக் கொண்டு வந்து மாற்றுக்கருத்து சொல்பவர்களை கைது செய்கிறார்கள். குறிப்பாக சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல் செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிக்கையாளர்களை எல்லாம் சிறையில் தள்ளும் ஏற்பாடு உள்ளது.

ஊடக சுதந்திரம் என்பது கட்டுப்படுத்தப்படுகிறது. தேசிய அளவிலான பல தொலைக்காட்சிகள் தேசிய அளவிலான ஊடகங்கள் மோடி அரசைப் பற்றி ஒற்றை வரியில் கூட விமர்சனம் செய்ய எவ்வளவு தயங்குகிறார்கள், எப்படியெல்லாம் அச்சுறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்.

அந்த தேசிய தொலைக்காட்சிகள் எல்லாம் மோடியினுடைய பக்தகோடிகளாக மாறிவிட்ட அவலத்தை பார்க்கிறோம். தொலைக்காட்சி அலைவரிசையின் உரிமையாளர்கள் மோடி அரசாங்கத்தால் மிரட்டப்படுவதன் காரணமாக இந்த மாற்றங்கள் அரங்கேறுகின்றன.

எனவே முக்கிய தொலைக்காட்சிகள் இந்த அரசைப்பற்றி ஒரு வரி கூட விமர்சனமோ, மாற்றுக்கருத்தோ சொல்ல முடியாத சூழலை பாஜக அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது.

இந்த 10 ஆண்டுகளில் இந்த நாட்டின் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மோடி ஆட்சிகாலத்தில் பறிக்கப்பட்ட விசயத்தை பல்வேறு சர்வதேச முகமைகள் சொல்லியிருக்கிறார்கள். இந்தியா ஜனநாயக நாடு என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்தியாவில் நிலவுவது முழு ஜனநாயகம் அல்ல. அரைகுறை ஜனநாயகம் தான் என்று மோடி ஆட்சியினுடைய சீர்கேட்டைப்பற்றி பல் சர்வதேச முகமைகள் கருத்து தெரிவித்து உள்ளார்கள்.

ஜனநாயகத்தின் மீது மோடி அரசு நடத்திய தாக்குதலுக்கு சற்றும் குறைந்ததல்ல மதசார்பின்மை மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள். எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் இந்திய அரசு ஆதரிக்கக்கூடாது என்று இந்திய அரசியல் சாசனம் சொல்கிறது. எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும் இந்திய அரசு சாய்மானமாக இருக்காது என்பதை அரசியல்சாசனம் சொல்கிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த கோட்பாடு மீறப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம். அதனுடைய உச்சகட்டமாகத்தான் ஜன.22ல் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடந்தது. அங்கு தலைமை பூசாரியாக இந்த நாட்டின் பிரதமர் வேலை பார்த்தார்.

பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவை இந்த ராமர் கோவில் திறப்பை பக்தி என்ற அடிப்படையில் பார்க்கவில்லை. மாறாக இதை ஒரு முக்கியமான தேசத்தின் அடையாளமாக ராமர் கோவிலை முன் வைக்கிறார்கள். தேசிய உணர்வுகளின் அடையாளம் ராமர் கோவில் என்பதை சித்தரிக்க முனைந்தார்கள். இந்த ராமர் கோவில் திறப்பு பற்றி சொல்ல வேண்டுமானால் தேசம், மதம், அரசு, இந்த 3ம் ஒன்றோடென்று ஆபத்தான கலவையாக கலக்கப்பட்டு நம் முன் வைக்கப்பட்டுள்ளது. இதை கவலையோடு பார்க்க வேண்டியுள்ளது. மக்களை பேட்ச் பேட்சாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பேர்களை பிஜேபியினர் அழைத்து வருகிறார்கள்.

ராமர் கோவில் பிஜேபியின் மிகப்பெரிய வாக்குசாவடியாக கருதிக்கொண்டிருக்கிறார்கள்.பாபர் மசூதி இருக்கும் போதே அதற்கு எதிரான பிரச்சாரம். பின்னர் பாபர் மசூதி இடிப்பு, அதற்கு பிறகு ராமர் கோவில் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, அடுத்து கட்டி முடித்து ராமர் கோவில் திறப்பு. இது இந்துத்துவாவின் நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதியாக அவர்கள் செய்தார்கள்.

ஜன.22 தான் உண்மையிலேயே இந்தியா விடுதலை பெற்றுள்ளது. ஆக.15ல் உண்மையான விடுதலை அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான அடிமைத்தனத்திலிருந்து இந்தியா விடுதலை பெற்றிருக்கிறது என்கிற கருத்தை விடாமல் அவர்கள் முன் வைத்ததை நாம் பார்க்க முடிந்தது. இந்த அடிப்படையில் இந்திய அரசியலின் அடிப்படை குணாம்சத்தை மாற்றுவதற்கு முயற்சி செய்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டை தொடரச்சியாக நாம் பார்க்கிறோம். தேசத்தின் பெருமிதத்தின் அடையாளம் ராமர் கோவில் திறப்பு என்று கூறுகிறார்கள்.

ராமர் கோவில் திறப்பு குறித்து மோடி பேசியது, ஆர்.எஸ்.எஸ். பேசியது எல்லாம் நாடாளுமன்றத்தி;ல் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. இதை கவலையோடு பார்க்க வேண்டியுள்ளது.
இந்துக்கள் அல்லாதவர்களின் கதி என்ன?

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல்கள் மதசார்பின்மையே இல்லாமல் போவதற்கு எல்லாவிதமான முயற்சிகளையும் எடுக்கிறார்கள் என்பதை நாம் எச்சரிக்கையோடு பார்க்க வேண்டும். பாஜக ஆர்.எஸ்.எஸ். பின்புலமாக இருந்து செயல்படுகிறார்கள்.

ஒரு இந்து ராஷ்டிரம் அமைக்கப்பட வேண்டும் என்கிற ஆர்.எஸ்.எஸ். அஜெண்டாவை நிறைவேற்ற முயல்கிறார்கள். இந்து ராஷ்டிரத்தில் இந்து அல்லாதவர்களின் கதி என்ன? நிலைமை என்ன? என்றால் அவர்கள் முழுமையான சகல உரிமைகளும் பெற்ற குடிமக்களாக இருக்க மாட்டார்கள். அது இஸ்லாமியர்களாக இருக்கலாம், கிறிஸ்துவர்களாக இருக்கலாம்.

இந்தியாவினுடைய 2ம் தர குடிமக்களாக இந்து ராஷ்டிரத்தில் இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் கருதப்படுவாரக்ள்.
இந்து வகுப்புவாத கார்ப்பரேட் கூட்டணி மோடி அரசை கட்சி தொடர்ச்சியாக விமர்ச்சிப்பதற்கு ஒரு வரியை பயன்படுத்துகிறது. இந்த அரசு ஒரு வகுப்புவாத கார்ப்பரேட் கூட்டணி அரசாங்கம். வெறும் வகுப்புவாதம் என்று கூட சொல்லக்கூடாது. இந்துத்துவா வகுப்புவாத கார்ப்பரேட் கூட்டணி என்று இந்த பாஜக அரசின் லட்சணம் என்பதை நாம் தெளிவுபடுத்த வேண்டும். ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் லார்சன் அண்ட் டர்போ என்ற எல்.அண்ட்டி. கம்பெனிக்கு கொடுக்கப்பட்டது. நாங்கள் நாட்டுக்காக இலவசமாக இந்த கோவிலைக்கட்டிக்கொடுத்ததாக அந்த நிறுவனம் கூறிக்கொண்டது.
இந்த கோவிலுக்கான வடிவமைப்பு டாடா குழுமம் செய்து கொடுத்தது. துவக்க நிகழ்ச்சியில் இந்தியாவில் உள்ள தொழில் அதிபர்கள் எல்லாம் ஆஜர் ஆகி இருந்தார்கள். இந்துத்துவா வகுப்புவாதமும், கார்ப்பரேட் நிறுவனங்களும் எப்படி கைகோர்த்து இணைந்து இந்த ஆட்சியில் உள்ளனர் என்பதற்கு இது ஒரு உதாரணம். இந்த பாஜக அரசு பெருமுதலாளிகளுக்கான கொள்கைகளைத்தான் கடைபிடிக்கிறது.
பெரும் நாசத்தை சந்திக்கும் ஏழைகள்
மோடி அரசு தான் நவீன தாராளமயமான கொள்கைகளை மிக தீவிரமாக அமுலாக்குகிறது என்று கார்ப்பரேட் நிறுவனங்கள் நம்புகின்றன. ஒரு மையப்படுத்த அரசாக பாஜக இருக்கிறது. அது இந்த நாட்டில் கார்ப்பரேட் சந்தைக்காக அது உதவும். அதற்காக நாடு தேசம் என்பது தான் உதவி செய்யும் என்று நம்புகிறார்கள்.

பாஜக கடைபிடிக்கும் கொள்கையால் மிகப்பெரிய பயனாளிகளாக கார்ப்ரேட் நிறுவனங்கள் தான் உள்ளன. இதன் காரணமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் அதீதமாக வளர்ந்துகொண்டே போகிறார்கள். இந்த 10 ஆண்டுகளில் அம்பானி, அதானியின் சொத்துக்கள் பல மடங்கு அதிகரித்து உள்ளன. இந்த தாராளமய கொள்கைகள் கார்ப்பரேட்டுகளுக்கு உதவுகிறதோயொழிய சாதாரண ஏழை மக்களுக்கு பெருத்த நாசத்தை ஏற்படுத்துகிறது.

தங்களை எதிர்க்கிற எதிர்கட்சிகளை அடக்குகிற ஒடுக்குகிற வேலை செய்கிற எதேச்சதிகார வேலைகளில் ஈடுபடுகிறது. எதிர்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களை கவிழ்கிற வேலையை செய்கிறது பாஜக அரசு. கர்நாடகா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதை பார்த்தோம். மகாராஷ்டிராவில் சிவசேனாவில் ஒரு பகுதியினரை விலைக்கு வாங்கி அந்த அரசுகளை கவிழ்த்தார்கள். எதிர்கட்சிகளை ஆளுகிற மாநிலங்களை கவிழ்க்க மோசமான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறது பாஜக அரசு.

கேரளா, தமிழநாடு போன்ற மாநிலங்களில் கவிழ்க்க முடியவில்லை என்பதனால் நிதி மூலமாக மூச்சடைக்க வைத்து ஒடுக்குகிற வேலையை செய்கிறது.

பாஜகவின் இந்த போக்குகளை எதிர்க்க நாடு முழுவதும் உள்ள 28 கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி உருவாக்கின. பிஜேபிக்கு எதிரான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும். அதற்காக மாநில அளவில் மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து ஒரு புரிந்துணர்வுக்கு வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தோற்கடிக்க தமிழக மக்கள் முன்வரவேண்டும். அதற்காக மார்க்சிஸ்ட் கட்சி களம் காண வேண்டும் இவ்வாறு பிரகாஷ் காரத் பேசினர்.

அவரது ஆங்கில உரையை உ.வாசுகி மொழி பெயர்த்தார். இந்நிகழ்ச்சிக்கு மரிநல செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் வரவேற்றார். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் என்.பாண்டி, எஸ்.கண்ணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Views: - 91

0

0