உக்ரைன் ராணுவத்தில் கோவை மாணவர்…தமிழகம் விரைந்த ‘ரா’ ஏஜெண்ட்ஸ்: அதிர்ச்சியில் பெற்றோர்..!!

Author: Rajesh
8 March 2022, 10:04 am
Quick Share

கோவை: உக்ரைன் துணை இராணுவப்படையில் கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் இணைந்து இருப்பது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் காரணமாக இந்திய மாணவர்கள் வெளியேறி வரும் நிலையில் கோவையை சேர்ந்த சாய்நிகேஷ் என்பவர் உக்ரைன் துணை இராணுவத்தில் இணைந்துள்ளார்.

கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த சாய்நிகேஷ் ரவிசந்திரன் என்பவர் 2018 முதல் உக்ரைனில் உள்ள கார்கோ நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலை கழகத்தில் விமானவியல் துறையில் படித்து வருகின்றார். உக்ரைன் நாட்டில் தற்போது நடைபெறும் போர் காரணமாக அந்த நாட்டில் உள்ள ஜார்ஜியன் நேசனல் லிஜியன் எனும் துணை இராணுவ பிரிவில் இணைந்துள்ளது இந்திய உளவு அமைப்புகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறு வயது முதலே இராணுவத்தில் சேர வேண்டும் என விரும்பிய சாய்நிகேஷ் ரவிசந்திரன், அதற்காக விண்ணப்பித்து இருந்தார். உயரம் குறைவாக இருந்ததால் இந்திய இராணுவத்தில் அவர் சேர்க்கப்பட வில்லை. உக்ரைனின் நடைபெறும் போர் காரணமாக அங்குள்ள துணை இராணுவ படையில் சாய்நிகேஷ் ரவிசந்திரன் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்திய மாணவர்கள் நாடு திரும்பி வரும் நிலையில் சாய்நிகேஷ் மட்டும் அந்த நாட்டிற்கு ஆதரவாக போர் புரிந்து வருவது மத்திய,மாநில உளவுத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. சாய் நிகேஷ் ரவிசந்திரன் துணை ராணுவத்தில் சேர்ந்திருப்பதால், அவரது பெற்றோர் மிகுந்த கவலையில் உள்ளனர்.

உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர் ஒருவர் சேர்ந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இந்திய உளவுத்துறை அமைப்பான ரா விசாரணை நடத்தி வருகிறது.

Views: - 755

0

0