கொடைக்கானல் – மூணாறு இடையே சாலை அமைக்க கேரள அரசுடன் பேச்சுவார்த்தை : அமைச்சர் எ.வ வேலு தகவல்!!!

22 July 2021, 7:36 pm
Minister EV Velu -Updatenews360
Quick Share

மதுரை : கொடைக்கானல் – மூணாறு இடையே சாலை அமைக்க கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தமிழக பொதுப்பணித்துறையின் கீழ் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆலோசனை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்.

பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் ஆண்டுக்கு 2 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றது. நில எடுப்பு பணிகள் காரணமாக நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

நில எடுப்பு பணியை விரைவுப்படுத்த 5 மாவட்ட வருவாய் அலுவலர்கள் நியமனம் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்த அவர், நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலை ஓரங்களில் மரங்கள் நடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவத்தார்.

பழனி – கொடைக்கானல் சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், கொடைக்கானல் – மூணாறு இடையே சாலை அமைக்க கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், கீழடியில் சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ள நகராட்சி, பேருராட்சி பகுதிகளில் புறவழிச்சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மதுரைக்கு கூடுதலாக 3 புதிய பாலங்கள் கட்டப்பட உள்ளன.

மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது, நூலகம் இடம் தேர்வு குறித்து முதல்வர் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என்றும் கூறினார்.

நில எடுப்பு காலதாமதம் ஆனதால் கிழக்கு கடற்கரை சாலைகள் அமைப்பதில் தொய்வு, கிழக்கு கடற்கரை சாலை பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறிய அவர், திமுக சொன்னதையும் செய்துள்ளது, சொல்லாததையும் செய்துள்ளது என்றார்.

ஒற்றை முறை டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 17 துறைமுகங்களில் பயணிகள் போக்குவரத்தை கொண்டு வர இயலாது, கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் பயணிகள் போக்குவரத்து சாத்தியமில்லை என கூறினார்

Views: - 115

0

0