ரூ.100 கோடி மோசடி..தலைமறைவாக இருந்த ப்ரணவ் ஜூவல்லரி பெண் உரிமையாளர் : கைவிலங்கு போட்ட காவல்துறை!

Author: Udayachandran RadhaKrishnan
14 December 2023, 7:58 pm
Pranav
Quick Share

ரூ.100 கோடி மோசடி..தலைமறைவாக இருந்த ப்ரணவ் ஜூவல்லரி பெண் உரிமையாளர் : கைவிலங்கு போட்ட காவல்துறை!

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, மதுரை, ஈரோடு உள்ளிட்ட 8 இடங்களில் பிரணவ் ஜுவல்லரி செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் அதன் உரிமையாளர்களான மதன் மற்றும் அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் வாடிக்கையாளர்களிடம் பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறி 100கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவாகினர்.

இதனால் பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள் இருவர் மீதும் திருச்சி, மதுரை, சென்னை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.
நூற்றுக்கணக்கான புகார்கள் வந்ததை தொடர்ந்து இந்த வழக்கானது பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு திருச்சி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.

மேலும் கார்த்திகா,மதன் மீது பொருளாதார குற்றப்பிரிவு தடுப்பு வழக்குப்பதிவு செய்து லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு தேடிவந்தனர்.

இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மதுரை மாவட்ட முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மதன்செல்வராஜ் நேரில் சரணடைந்தார்.

ஆயினும் மனைவி கார்த்திகா தலைமறைவாகவே இருந்து வந்த சூழலில் கார்த்திகா இன்று திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி லில்லிகிரேஸ் தலைமையிலான காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Views: - 350

0

0