சிறுசேமிப்பு திட்டம் என கூறி ரூ.50 கோடி சுருட்டல்… தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் கவர்ச்சிகரமான அறிவிப்பால் ஏமாந்த மக்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 December 2023, 3:55 pm
Fraud
Quick Share

சிறுசேமிப்பு திட்டம் என கூறி ரூ.50 கோடி சுருட்டல்… தனியார் பைனான்ஸ் நிறுவனத்தின் கவர்ச்சிகரமான அறிவிப்பால் ஏமாந்த மக்கள்!!

போச்சம்பள்ளி பகுதியில் சிறுசேமிப்பு திட்டம் நடத்துவதாக கூறி, 50 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 200க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வாக்கடையை சேர்ந்தவர் ராபட். இவர், தன் சகோதரி வனிதா மற்றும் உறவினர்கள் பாலாஜி, அன்புராஜ், பூமொழி உள்ளிட்டோருடன் இணைந்து திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் பைனான்ஸ் கம்பெனி நடத்தியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை பகுதிகளில் கடந்த, 2021 முதல், 7 கிளைகளுடன், போச்சம்பள்ளியை தலைமையிடமாக கொண்டு ஏ.பி.ஆர்., என்ற பெயரில் பைனான்ஸ் கம்பெனி நடத்தியுள்ளனர். இதில், கடந்தாண்டு தீபாவளி சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் பல கவர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளனர்.

அதாவது, 100 ரூபாய் முதல், 3,500 ரூபாய் வரை மாத்தவணையாக கட்டினால், 12 மாதங்களுக்கு பிறகு கட்டிய தொகைக்கு இரட்டிப்பான பரிசுப்பொருட்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

மேலும், 200 பேரை சிறுசேமிப்பு திட்டத்தில் சேர்த்து விடுபவர்களுக்கு, 10 ஆயிரம், 300 பேருக்கு, 15 ஆயிரம் ரூபாய் என ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். இதை நம்பி, போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரை உள்ளிட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள், ஆந்திர மாநிலம் குப்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட, ஆயிரக்கணக்கானோர் மாத்தவணையாக பல கோடி ரூபாய் கட்டியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஓராண்டாக பொதுமக்கள் கட்டிய, 50 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகைக்கு பரிசு பொருட்கள் வழங்கவில்லை; பரிசு பொருட்களும் வழங்கவில்லை. இதையடுத்து அந்தந்த பகுதி மக்கள் போலீசில் புகாரளித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த, நான்கு நாட்களுக்கு முன் அந்த பைனான்ஸ் நிறுவன மேலாளர் வனிதா என்பவரை போச்சம்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்த, 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அவர்கள் அனைவரும் தனித்தனியாக மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்க வேண்டும் என்றனர். இதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்தனர். யாரேனும், நான்கு பேர் மட்டும் மனு அளித்து செல்லுங்கள் எனக்கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அவர்களிடம் கிருஷ்ணகிரி டி.ஆர்.ஓ., சாதனைக்குறள் போச்சம்பள்ளி இன்ஸ்பெக்டர் கிரிஜாராணி, பாரூர் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் உள்ளிட்ட போலீசாரும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், பைனான்ஸ் நடத்தியவர்களின் சொத்து விவரங்களை சார் பதிவாளர் அலுவலகத்தில் போலீசார் தெரிவிக்கவில்லை. பெயரளவுக்கு மட்டும் ஒருவரை கைது செய்துள்ளனர்.

பணத்தை மீட்டு தருவோம் எனக்கூறும் போலீசார், அதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர் அடுக்கடுக்கான புகார்களை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒவ்வொருவர் புகாரும் தனித்தனியாக பதியப்பட்டு சட்டப்படி விரைவில் நடவடிக்கை எடுப்போம் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Views: - 344

0

0