இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்க.. குடும்பத்திற்கு ரூ. 5000 வழங்குக : முதலமைச்சருக்கு ஸ்டாலின் கோரிக்கை..!
23 August 2020, 3:11 pmசென்னை : கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இபாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- டிசம்பர் 2019 உடன் ஒப்பிடும் போது வேலை வாய்ப்பின்மை 10 மடங்காக உயர்ந்து தமிழகத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் 49.8% அதிகரித்திருக்கிறது.
ஒழுங்குமுறையில்லாமல் ஊரடங்கை நீட்டித்து, டாஸ்மாக்கைத் திறந்து, பிழைப்பு தேடிச் செல்வோரைத்தடுத்து, இ-பாஸ் மூலமாக மக்களை முடக்கிவிட்டது அரசு.
அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை” மற்றும் “மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெவலப்மென்ட்
ஸ்டடீஸ்” இணைந்து நடத்திய ஆய்வில், மார்ச் முதல் மே வரையிலான 3 மாதங்களில் தமிழ்நாட்டில் 53% வீடுகளில் தலா ஒருவர் வேலை இழந்திருக்கிறார்.
கிராமப்புறங்களில் 56%, நகர்ப்புறங்களில் 50% குடும்பங்களில் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 92%, நகர்ப்புறங்களில் 95% வீடுகளில் வருமான இழப்பு ஏற்பட்டிருக்கிறது. அமைப்புசாரா தொழிலாளர்கள் 83.4% பேர் தங்களது வேலையை இழந்திருக்கிறார்கள்.
“முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம்”, “புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறோம்” என பொய்களை தினமும் கட்டவிழ்க்கிறார்கள்!
தி.மு.க சொன்ன போது கேட்காத முதலமைச்சர் அரசே நடத்தியுள்ள ஆய்வின் தகவல்களையாவது ஏற்றுக் கொள்ள வேண்டும். இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்து, குடும்பத்திற்கு 5000 ரூபாய் நிதி அளித்திட வேண்டும்; முதலீட்டாளர் மாநாடுகள், வெளிநாடு சுற்றுலா மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் பெறப்பட்ட முதலீடுகள், உருவாக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்!, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.