சத்குரு பிறந்தநாள் கொண்டாட்டம் : ஆயிரக்கணக்கான மலைவாழ் மற்றும் கிராம மக்கள் பக்தியுடன் ஒன்று கூடி கோலாகலம்!

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2023, 9:32 am
Sadhguru - Updatenews360
Quick Share

சத்குரு அவர்களின் பிறந்தநாளான செப் 3 ஆம் தேதியை ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்களும், கிராம மக்களும் ஒன்று கூடி பக்தியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சத்குரு அவர்களின் திருவுருவ படத்தை வைத்து பூஜைகள் செய்தும், இனிப்புகள் வழங்கியும், அன்னதானமிட்டும் பெரு விமர்சையாக பக்தியுடன் கொண்டாடினர்.
 
ஈஷா யோக மையத்தை சுற்றியிருக்கும் கிராம பகுதிகளான மத்வராயபுரம், முட்டத்துவயல் ஆகிய கிராம பகுதிகளில் சத்குருவின் திருவுருவ படத்தை வைத்து வழிபட்டு அன்னதானமிட்டு கொண்டாடினர். மேலும் தேவராயபுரம், விராலியூர், நரசிபுரம், இந்திராநகர் (விராலியூர்), காந்தி காலனி (செம்மேடு) ஆகிய பகுதியில் சத்குருவின் படம் வைத்து பூஜைகள் செய்து இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியையும் பக்தியையும் பகிர்ந்து கொண்டனர்.

இதைப்போலவே மலைவாழ் மக்கள் வசிக்கும் பஞ்ச கிராமம் என்று அழைக்கப்படும் பட்டியார் கோவில் பதி, மடக்காடு, தாணிக்கண்டி, முள்ளங்காடு, குலத்தேரி,  ஆகிய கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் சத்குருவின் திருவுருவத்தை ரதத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்து ஆதியோகியின் சிலையின் முன்பாக மாலை 6.30 மணியளவில் அவர்களின் ஊர்வலத்தை நிறைவு செய்தனர்.  இந்த கொண்டாட்டங்களில் சிங்கப்பதி, சர்கார் போரத்தி, நல்லூர்பதி, சந்தேகவுண்டன் பாளையம் ஊர்களை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தில், மலைவாழ் மக்கள் அவர்களுக்கே உரிய மேளங்கள் முழங்க நடனமாடி கொண்டாட்டத்துடன் இந்த விழாவை நடத்தினர். இந்த ஊர்வல நிறைவை தொடர்ந்து ஆலந்துறை, தொண்டாமுத்தூர், அட்டுக்கள், சந்தேகவுண்டன் பாளையம், பூலுவாம்பட்டி மக்கள் ஒன்றிணைந்து இரவு அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

 ஈஷா யோக மையத்தை சுற்றி இருந்த அனைத்து கிராம மற்றும் மலை வாழ் பகுதிகளும் நாள் முழுவதும் நிகழ்ந்த ஏராளமான நிகழ்ச்சிகளால்  விழா கோலம் பூண்டிருந்தது.

Views: - 197

0

0