பெண் ஊழியரை தாக்கி மானபங்கம் செய்த திமுக நிர்வாகி: சுங்கச்சாவடியில் கட்டணம் கேட்டதால் அடாவடி..!!

Author: Rajesh
30 March 2022, 3:50 pm
Quick Share

சேலம்: தலைவாசல் சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த கூறிய பெண் ஊழியரை திமுக நிர்வாகி தாக்கி மானபங்கம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தலைவாசலை அடுத்து சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நத்தக்கரை சுங்கச்சாவடி உள்ளது. இங்கு சுங்க கட்டணம் வசூலிக்கும் பணியில் 14 பெண் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நத்தக்கரையை சேர்ந்த தமிழ்மணி என்பவரின் மனைவி நிர்மலாதேவியும் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று காலை 10.35 மணிக்கு கார் ஒன்று சுங்கச்சாவடியை கடந்துள்ளது. இந்த காரில் திமுக பிரமுகர்கள் பயணம் செய்துள்ளனர். அப்போது, காரை நிறுத்தி அவர்களிடம் சுங்கச்சாவடி பெண் ஊழியர் நிர்மலா சுங்ககட்டணம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் நாங்கள் திமுக நிர்வாகிகள் எனவே, பணம் தர முடியாது என கூறி வாக்குவாதம் செய்துள்ளனர். அதற்கு, நிர்மலா தேவியோ, சுங்க கட்டணம் செலுத்துங்கள் அல்லது அடையாள அட்டையை காண்பியுங்கள் என வற்புறுத்தியுள்ளார்.

அதற்கு அவர்கள் மறுக்கவே வாகனத்தை விடுவிக்கவில்லை. உடனே காரில் வந்தவர்கள் இதுகுறித்து, தலைவாசல் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் நிவாசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே நிவாஸ் சுங்கச்சாவடிக்கு மோட்டார் சைக்கிளில் விரைந்து வந்தார்.

சுங்கச்சாவடியை வந்தடைந்ததும், கேட்டை அவரே எடுத்துவிட்டு அந்த காரை அனுப்பி உள்ளார். இதுகுறித்து, சுங்கச்சாவடி பெண் ஊழியர் நிர்மலாதேவி ‘எங்கள் அனுமதி இல்லாமல் எப்படி நீங்கள் சுங்கச்சாவடி கதவை திறந்துவிடலாம்’ என கேட்டதற்கு அந்த பெண் ஊழியரிடம் நிவாஸ் வாக்குவாதம் செய்து உள்ளார்.

அப்போது வாய்த்தகராறு முற்றி அந்த பெண் ஊழியரை தனது கைகளால் சரமாரியாக நிவாஸ் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், மானபங்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பின்னர் தாக்குதலுக்கு உள்ளான பெண் ஊழியர் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து நிர்மலாதேவி தலைவாசல் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், தலைவாசல் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் நிவாஸ் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

நத்தக்கரை சுங்கச்சாவடி பெண் ஊழியரை தாக்கியதாக தி.மு.க. இளைஞரணி நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் தலைவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 1001

0

0