3வது முறையாக ஜாமீன் கேட்ட செந்தில்பாலாஜி… நீதிமன்றம் காட்டிய பச்சைக் கொடி : தயாராகும் அமலாக்கத்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
3 January 2024, 1:44 pm
Senthil - Updatenews360
Quick Share

3வது முறையாக ஜாமீன் கேட்ட செந்தில்பாலாஜி… நீதிமன்றம் காட்டிய பச்சைக் கொடி : தயாராகும் அமலாக்கத்துறை!!

கடந்த ஜூன் 14-ஆம் தேதி சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அதன் பிறகு அவர் பொறுப்பு வகித்து வந்த மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை ஆகிய துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கி கொடுக்கப்பட்டு இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என தமிழக அரசு அறிவித்தது.

இதற்கிடையில், கைது செய்யப்பட்டத்திலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சென்னை முதன்மை நீதிமன்றத்தில் 2-முறை ஜாமீன் மனு தாக்கல் செய்து இருந்தார். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் உயர்நீதிமன்றமும் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது.

பின்னர், அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றம் நீதிபதிகள் மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்கமுடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற மனுதாக்கல் செய்ய அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இன்று 3-வது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது இருதரப்பினரும், பதில் அளிக்கவும், வாதங்களை முன் வைக்கவும் கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜி ஜாமீன் மனு குறித்து அமலாக்கத்துறை பதில் தர சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும் வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 8-ஆம் தேதிக்கு நீதிபதி அல்லி ஒத்திவைத்தார்.

Views: - 620

0

0