கோவையில் ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்: கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆரம்ப பள்ளி கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டம்..!!

Author: Rajesh
8 February 2022, 12:29 pm
Quick Share

கோவை: ஆசிரியர் கவுன்சிலிங் நடைபெறும் நிலையில் பல்வேறு பள்ளிகளில் தலைமையாசிரியர்களை நியமனம் செய்ய கோரி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றைய தினம் கோவை ராஜவீதி பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் விருப்ப இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்டவற்றிற்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது.

இந்நிலையில் கோவை சங்கர் நகர் பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளி மற்றும் முத்துக்கல்லூர் பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளி ஆகிய இரு பள்ளிகளிலும் தலைமை ஆசிரியரை நியமிக்க வலியுறுத்தி அப்பள்ளியின் ஆசிரியர்கள் கவுன்சிலிங் நடைபெறும் கூட்டரங்கிற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி கூட்டமைப்பினர் இந்த உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் சங்கர் நகர் பகுதியில் உள்ள பள்ளியில் 4 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், முத்துக்கல்லூர் பள்ளியில் 7 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதாகவும் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள துவக்க பள்ளி மற்றும் வால்பாறை யில் உள்ள இரு துவக்கப்பள்ளிகளில் தலைமையாசிரியர் நியமிக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

மேலும் வெள்ளலூர் பகுதியில் ஆரம்ப பள்ளி கட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும் இன்னும் திறக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினர். ஆகவே உடனடியாக அப்பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியரை நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இவர்களின் போராட்டத்தால் கவுன்சிலிங் வந்த இதர ஆசிரியர்கள் தாங்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

Views: - 985

0

0