‘திருநெல்வேலி போஸ்டர் சிட்டி’.. உடல் முழுவதும் போஸ்டரை தொங்க விட்டு மனு அளிக்க வந்த நபரால் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
24 July 2023, 7:01 pm
Quick Share

திரும்பும் இடமெல்லாம் போஸ்டர் ஒட்டுவதால் விபத்து அபாயம் இருப்பதாக கூறி உடல் முழுவதும் போஸ்டரை தொங்க விட்டு நூதன முறையில் மனு அளிக்க வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது, சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார் என்பவர் உடல் முழுவதும் போஸ்டர்களை தொங்க விட்டபடி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது, அவர் கூறியதாவது :- நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக நுழைவு வாயில் மற்றும் அரசு பள்ளி சுவர்கள், தாலுகா ஆபிஸ், தேர்தல் ஆணைய சுவர்கள், பேருந்து நிலைய சுவர்கள், அரசு பாளையங்கள் பொதுமக்கள் கடந்து செல்லும் பாதை எங்கும் போஸ்டர்மயமாக உள்ளது.

வாகனத்தில் செல்வோர் இந்த போஸ்டர்களால் கவனம் திசை திரும்பி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாநகரம் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயர் தற்போது மாறி திருநெல்வேலி போஸ்டர் சிட்டி என்ற அளவில் போஸ்டர் மயமாக காணப்படுகிறது.

எனவே, உடனடியாக அரசு தலையிட்டு கல்விக்கூடங்கள், நெடுஞ்சாலைகள் உட்பட பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஓட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறி தனது உடலில் போஸ்டர்களை கட்டி மனு அளிக்க வந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.

இது குறித்து கிருஷ்ணகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘பொது இடங்களில் போஸ்டர் ஒட்டப்படுவதால் மக்கள் அதை வேடிக்கை பார்க்கும் போது விபத்து ஏற்படும். எங்கு பார்த்தாலும் போஸ்டர் ஒட்டுகிறார்கள்.

விட்டால் மக்களின் முகத்தில் கூட போஸ்டர் ஒட்டுவார்கள். எனவே, இந்த போஸ்டர் ஓட்டுவதை தடுக்கக் கோரி ஆட்சியிடம் மனு அளிக்க வந்தேன், என்று கூறினார்.

Views: - 301

0

0