தண்ணீர் லாரி ஏற்றி தந்தையை கொலை செய்த மகன்… கழன்று விழுந்த நம்பர் பிளேட்… கொத்தாக தூக்கிய போலீஸ்..!!

Author: Babu Lakshmanan
22 July 2023, 9:28 pm
Quick Share

கரூர் அருகே முன்விரோதம் காரணமாக தண்ணீர் டேங்கர் லாரி மூலம் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த சொந்த அப்பாவை இடித்து கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த கொறவப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (57). இவர் ஹிட்டாச்சி வாகனம் மற்றும் கதிரடிக்கும் இயந்திரங்களை வைத்து தொழில் நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி ஜெயலட்சுமி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மனைவி இறப்புக்கு பிறகு அதே ஊரைச் சேர்ந்த கணவனை இழந்த வேறொரு பெண்ணுடன் தங்கராஜ் தகாத உறவில் இருந்து வந்துள்ளார்.

இதன் காரணமாகவும், சொத்து பிரச்சனை காரணமாகவும் தாந்தோணிமலை, தென்றல் நகர் பகுதியில் மனைவி குழந்தைகளுடன் வசித்து வரும் அவரது மகன் மோகனசுந்தரம் (30) ஆகிய இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே இருந்து வரும் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர நினைத்த மோகனசுந்தரம், தனது மாமா உறவின் முறையில் இருக்கும் மகாசாமி (45) என்பவருடன் சேர்ந்து தந்தை தங்கராஜை கொலை செய்ய சதி திட்டம் தீட்டி உள்ளார்.

இன்று அதிகாலை சுமார் 5.00 மணி அளவில் கொறவப்பட்டி – தம்மநாயக்கன்பட்டி பிரிவு சாலையில் இருசக்கர வாகனத்தில் எதிரே வந்து கொண்டிருந்த தங்கராஜை தண்ணீர் டேங்கர் லாரியின் மூலம் இடித்து தூக்கி வீசி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த தங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சொந்த அப்பாவையே கொலை செய்து விட்டோம் என்று குற்ற உணர்ச்சி இல்லாமல், அங்கிருந்து மகாசாமியுடன் தப்பித்துச் சென்ற மோகனசுந்தரம், சிறிது நேரம் கழித்து தனது மனைவியுடன் தங்கராஜ் இறப்புக்கு வருவது போல் அப்பாவி போல் வந்துள்ளார்.

இது குறித்து உறவினர்கள் எழுப்பிய சந்தேகத்தின் பேரில் வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போது, டேங்கர் லாரியின் நம்பர் பிளேட் பாகம் கீழே கிடந்தது தெரியவந்துள்ளது. அதை சோதனை செய்து பார்த்ததில் மோகனசுந்தரம் சொந்த அப்பாவையே வாகனத்தை ஏற்றி கொலை செய்தது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து மோகனசுந்தரம் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த மகாசாமி ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் வெள்ளியணை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 216

0

0