வாட்டி வதைக்கும் வெயில்…வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Author: Rajesh
8 May 2022, 2:45 pm
akni summer - updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இதற்கு அசானி என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும். செவ்வாய்க்கிழமை மாலை வடக்கு ஆந்திரா-ஒடிசா கடற்கரையையொட்டிய மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக்கூடும்.

அதன் பிறகு வடக்கு-வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரையையொட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 15 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை தமிழகத்தின் வட மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த நிகழ்வால் சில பகுதிகளில் மழை பெய்தாலும், தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைப்பெய்யக்கூடும்.

தீவிர புயல் காரணமாக மத்திய வங்கக்கடல் பகுதியில் இன்று மணிக்கு 105 கி.மீ. முதல் 125 கி.மீ. வரையிலான வேகத்திலும், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று 95 கி.மீ. முதல் 115 கி.மீ. வரையிலான வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Views: - 567

0

0