அந்த இடத்தில் கைவைத்து சில்மிஷம்.. புகார் கூறிய ஆசிரியை : பரதநாட்டியக் கலைஞர் ஜாகீர் உசேன் மீது நடவடிக்கை எடுப்பாரா முதலமைச்சர்?

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2022, 8:39 pm
Zakir Hussain - Updatenews360
Quick Share

தமிழக பரத நாட்டிய கலைஞரான ஜாகீர் உசேன், தமிழக கலை பண்பாட்டு துறையின் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளி கலையியல் அறிவுரைஞராக அண்மையில் நியமிக்கப்பட்டார். இவர் கரூர் மாவட்ட இசை பள்ளிக்கு, ஜாகீர் உசேன் ஆய்வுக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கு பணியாற்றி வந்த இசைப்பள்ளியின் ஆசிரியைக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த ஆசிரியை, தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்திக்கு அனுப்பிஉள்ள புகார் கடிதம்:நான் பாரம்பரிய இசை குடும்பத்தைச் சேர்ந்தவர். கரூர் மாவட்ட அரசு இசை பள்ளியில் பணிபுரிந்து வருகிறேன். பிப்., 28ல் கலையியல் அறிவுரைஞர் ஜாகிர் உசேன், எங்கள் பள்ளிக்கு ஆய்வு வந்தார்.அனைவருக்கும் மத்தியில், என்னை அவமானப்படுத்தும் வகையில் பேசினார். பின், தலைமை ஆசிரியை அறைக்கு, என்னை மட்டும் உள்ளே வரச்சொல்லி கதவை மூடினார்.

அங்கு, என் தோள்பட்டை மேல் கை வைத்து, இடுப்பின் மீது கைகளை மடக்கி வைத்து, ‘இப்படி நடனமாட வேண்டும்’ என, சொல்லி மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டார். இந்த நிகழ்வு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. ‘ஏப்ரல் மாதம் பயிலரங்கம் மூன்று நாள் நடத்த போகிறேன். அங்கு, உங்களுக்கு எல்லாம் வகுப்பு எடுக்க வேண்டும்’ என, ஆசிரியைகளை தரக்குறைவாக பேசினார். அதன்பின், கதவை திறந்து வெளியேறி விட்டேன்.

இச்சம்பவம் மனதை வேதனைப்படுத்தியது. இதற்கு பின் நாம் உயிர் வாழ வேண்டுமா? என்று எண்ணி, தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்றியது.நடந்த விஷயங்களை கடிதத்தின் வாயிலாக என்ன கூற முடியுமோ, அவற்றை மட்டும் தங்கள் கவனத்திற்கு பணிந்து அனுப்பிஉள்ளேன். இப்பிரச்னை மீதான நடவடிக்கையால், வரும் காலங்களில் பெண் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என நம்புகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, சிவகங்கை மாவட்ட இசை பள்ளிக்கு ஆய்வுக்கு வந்த போது, பெண் ஆசிரியையிடம் அத்துமீறி ஜாகீர் உசேன் நடந்து கொண்டதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

கரூர் மாவட்ட இசைப்பள்ளி ஆசிரியை அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு கலை பண்பாட்டு துறை இயக்குனர் காந்தி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கலையியல் அறிவுரைஞர் ஜாகீர் உசேன் மீது தொடர்ந்து பாலியல் தொல்லை புகார் வந்து கொண்டிருக்கும் வேளையில், ஏப்ரல் மாதம் நடக்கும் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் நடன பயிலரங்கம் நடத்துவது குறித்து தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இசைப்பள்ளி ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில், பாலியல் தொல்லை கொடுத்த ஜாகீர் உசேன், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விருது வழங்கிய புகைப்படங்கள், அவருக்கு சால்வை அணிவிக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

இதனிடையே ஜாகீர் உசேன் மீது புகார் கொடுத்துள்ள இசை பள்ளி ஆசிரியர் வெளியிட்ட வீடியோவில், குரு மீது பாலியல் அத்துமீறல் செய்வது நியாயமா? திமுகவில் பொறுப்பில் உள்ள அவரை நீக்க முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Views: - 1166

0

0