வீடு புகுந்து பாஜக நிர்வாகி குடும்பத்தை வெட்டிச் சாய்த்த கும்பல் : திமுக அரசை விமர்சித்து அண்ணாமலை கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
4 September 2023, 8:45 am
annama - Updatenews360
Quick Share

வீடு புகுந்து பாஜக நிர்வாகி குடும்பத்தை வெட்டிச் சாய்த்த கும்பல் : தெருவுக்கு தெரு டாஸ்மாக்கால் நடந்த வினை.. அண்ணாமலை கண்டனம்!

பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர்களது குடும்பத்தினர், மர்மமான முறையில் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டதில் மோகன்ராஜ், புஷ்பவதி மற்றும் ரத்தினாம்பாள் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இதில் மோகரன் ராஜ் பாஜகவில் பொங்கலூர் மேற்கு ஒன்றிய மாதப்பூர் பஞ்சாயத்து கிளை தலைவராக செயல்பட்டு வருகிறார்.

உடனடியாக தகவல் அறிந்து வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்த செந்தில்குமார் மற்றும் மற்றொருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையே, உயிரிழந்த மற்ற மூவரின் உடல்களை எடுக்க விடாமல் ஊர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளியை கைது செய்த பிறகு தான் மற்ற மூவரின் உடல்களையும் எடுக்க விடுவோம் எனக் கூறி உறவினர்களும், ஊர் மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர், போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சடலங்களை மீட்டு, உடற்கூராய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலைக்கான காரணம் என்ன? ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரையும் வெட்டிக் கொன்றது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் குடியிருப்பு பகுதியில் மது அருந்தியவரை தட்டிக் கேட்ட மோகன்ராஜ் மற்றும் அவரது குடுமப்த்தினரை கொலை செய்ததாக தகவல் வெளியாகியள்ளது.

இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனங்களை பதிவு செய்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், குடியிருப்புப் பகுதியில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்ட, பல்லடம் சட்டமன்றம் பொங்கலூர் பாஜக மேற்கு ஒன்றியம் மாதப்பூர் பஞ்சாயத்து கிளை தலைவர் சகோதரர் திரு.மோகன்ராஜ் அவர்கள் சமூகவிரோதிகளால் குடும்பத்துடன் வெட்டிக் கொல்லப்பட்ட செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். திரு. மோகன் ராஜ் அவரது தம்பி, அக்கா, சித்தி என நான்கு பேரையும் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளனர். சகோதரர் மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தெருவுக்குத் தெரு மதுக் கடைகளைத் திறந்து வைத்து, கட்டுப்பாடற்ற மது விற்பனையை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் திமுக அரசின் சாராய வியாபாரிகள் பணம் சம்பாதிக்க, இன்னும் எத்தனை பொதுமக்கள் உயிர் பலியாக வேண்டும்?

தினம் ஒரு கொலை தமிழகத்தில் நடந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கையில், அதற்குப் பொறுப்பான காவல்துறையைக் கையில் வைத்துக்கொண்டு, நம்பர் ஒன் முதல்வர் என்று விளம்பரம் செய்ய வெட்கமாக இல்லையா முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே.

குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கைகள் கட்டப்பட்டு இருக்கும் காவல்துறையை ஆளுங்கட்சி பிடியிலிருந்து விடுவித்து அவர்கள் பணி செய்ய அனுமதித்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Views: - 366

0

0