‘ஹாரன்’ அடித்தும் வழி விடாமல் நடந்து சென்ற முதியவர் அடித்து கொலை..! கோவையில் கொடூரம்!!!

Author: Udayachandran
29 July 2021, 7:21 pm
Old Man Murder-Updatenews360
Quick Share

கோவை : ‘ஹாரன்’ அடித்தும் பைக்கிற்கு வழிவிடாத முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வெள்ளலூர் அருகே உள்ள காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி (வயது 72). இவர் நேற்று இரவு அதே பகுதியில் நடந்து சென்ற போது அவருக்கு செல்போனில் அழைப்பு வந்தது.‌

செல்போனில் பேசியபடி இவர் ரோட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக காமராஜபுரம் பகுதியை சேர்ந்த சிவா (வயது 27 ) என்பவர் தனது மனைவி சங்கீதா உடன் பைக்கில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.‌

இவர் பைக்கில் ஹாரன் அடித்த போது பொன்னுச்சாமி வழி விடாமல் தொடர்ந்து நடந்து சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது. இதில் கோபமடைந்த சிவா பைக்கை நிறுத்தி விட்டு வந்து பொன்னுசாமியை பிடித்து சரமாரியாக தாக்கினார்.

அவரை கட்டையால் அடித்து கீழே தள்ளி விட்டதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த பொன்னுச்சாமி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இன்று காலை இறந்துவிட்டார்.

இதுதொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சிவாவை தேடி வருகின்றனர்.

Views: - 192

0

0