ஹெல்மெட்டை திருடியதால் கடுப்பான வாகன ஓட்டி செய்த காரியம் : வைரலாகும் போஸ்டர்!!!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2021, 4:36 pm
Helmet Theft Poster -Updatenews360
Quick Share

கோவை : கோவையில் தனது வாகனத்தில் இருந்த ஹெல்மெட்டை மர்மநபர் திருடிச் சென்றதால் கடும் கோபமடைந்த வாகன ஓட்டி போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளார்.

கோவை ரேஸ்கோர்ஸ் அருகே ஒசூர் சாலையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. பல்வேறு அலுவல்களுக்காக பொதுமக்கள் இந்த அலுவலகத்திற்கு வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வாந்து செல்லும் மக்களுக்காக அங்கு பிரத்தியேக பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அங்கு வந்த வாகன ஓட்டி ஒருவர் தனது வண்டியில் ஹெல்மெட்டை வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

அப்போது வண்டியில் இருந்த ஹெல்மட்டை யாரோ திருடிச் சென்று விட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் பார்க்கிங் வளாகத்திலேயே போஸ்டர் ஒன்றை அடித்து ஒட்டி உள்ளார். மேலும் தனது ஹெல்மெட்டை மீண்டும் வண்டியிலேயே வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அடித்துள்ள போஸ்டரில், “TN 99 T 3276 என்ற வண்டியில் இருந்த ஹெல்மெட்டை கவ்விச் சென்ற நாய்/நபர்கள் அந்த ஹெல்மெட்டை வண்டியில் போடவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வாகன ஓட்டியின் இந்த கடும் கோபத்தைப் பார்த்தாவது ஹெல்மட் திருடன் திருந்துவானா? என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Views: - 175

0

0