பதற வைக்கும் மங்கி குல்லா கொள்ளையர்கள்.. ஆளில்லா வீடுகள் தான் டார்கெட்.. தொடரும் திருட்டு சம்பவம் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
22 December 2023, 3:02 pm
Quick Share

தேனி ; போடிநாயக்கனூர் கிருஷ்ணா நகர் பகுதியில் மீண்டும் மீண்டும் நடைபெற்று வரும் தொடர் கொள்ளை சம்பவத்தில் மங்கி குல்லா கொள்ளையர்கள் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேலசொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்டது கிருஷ்ணா நகர் குடியிருப்பு. இப்பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி உடன் மருத்துவ சிகிச்சைக்காக திருச்சி சென்றுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அவரது உறவினர் ராமமூர்த்தி வீட்டை வந்து பார்த்த பொழுது வீட்டின் முன்புற கதவு பூட்டு பூட்டப்பட்ட நிலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பதைக் கண்டு உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இடத்தை ஆய்வு செய்தபோது அங்கு உள்ள வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

நேற்று இதே பகுதியில் சரவணகுமார் என்பவர் வீட்டில் சுமார் 3 1/2பவுன் தங்க நகை வெள்ளிப் பொருட்கள் மற்றும் 800 ரூபாய் ரொக்க பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இவர் தனது தந்தையின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை சென்ற நிலையில், பூட்டி இருந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப் பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதேபோல் 1 மாதம் முன்பு இதே மகாலட்சுமி நகர் பகுதியில் மகளின் வளைகாப்பிற்காக அன்னலட்சுமி என்பவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று இருந்த நிலையில் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு சுமார் 14 பவுன் தங்க நகைகள் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கப்பனம் திருடுபோயின.

அதே நாளில் அதே பகுதியில் மகள் வீட்டிற்குச் சென்றிருந்த மின்வாரிய ஊழியர் ஒருவர் வீட்டில் பூட்டி இருந்த கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த வெள்ளி பொருட்கள் மற்றும் எல்இடி டிவி போன்றவை கொள்ளடிக்கப்பட்டது. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

ஒரு மாத காலம் ஆகியும் இன்னும் கொள்ளையர்கள் பிடிபடாத நிலையில் ஒரே பகுதியில் தொடர்ந்து நடைபெறும் இந்த கொள்ளை சம்பவம் இப்பகுதியில் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதி மக்களே தங்களது சொந்த செலவில் சுமார் மூன்று லட்சம் செலவு செய்து இப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 408

0

0