தென்கைலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை… தமிழகம் மற்றும் புதுவையில் வலம் வருகிறது!!
Author: Babu Lakshmanan3 February 2024, 1:41 pm
தென்கைலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஆதியோகி ரத யாத்திரை சுமார் 35,000 கி.மீ தூரம் பயணிக்க உள்ளது. இந்த ரதம் 60 நாட்களில் ஆயிரக்கணக்கான கிராமங்களில் வலம் வர இருக்கிறது.
இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (பிப் 3) நடைபெற்றது. இதில் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் திரு மகேந்திரன் அவர்கள் பங்கேற்று பேசியதாவது:
கோவை ஈஷா யோக மையத்தில் 30 ஆவது ஆண்டாக மஹாசிவராத்திரி விழா மார்ச் 8 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ரத யாத்திரை கோவையில் உள்ள ஆதியோகி முன்பு கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. 4 ஆதியோகி ரதங்களை உள்ளடக்கிய இந்த யாத்திரையை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட ரதங்கள் தமிழ்நாடு மற்றும் புதுவையின் நான்கு திசைகளிலும் வலம் வந்து கொண்டிருக்கிறது.
ஜனவரி 5 முதல் மார்ச் 8 ஆம் தேதி வரையிலான இரண்டு மாதங்களில், ஆயிரக்கணக்கான கிராமங்கள் மற்றும் நகரங்கள் வழியாக இந்த ரதங்கள் பயணிக்க உள்ளன. இந்த யாத்திரையை அந்தந்த ஊர்களிலுள்ள பெருமக்கள் வரவேற்று தொடங்கி வைக்கின்றனர். அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் ஆதியோகிக்கு பூ, பழம் மற்றும் ஆரத்தி உள்ளிட்டவற்றை அர்ப்பணித்து சிறப்பாக வரவேற்று வருகிறார்கள். கோவைக்கு நேரில் வந்து தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை பயனுள்ளதாக உள்ளது.
அந்த வகையில் தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களுக்கு ஆதியோகி ரதம் இந்த மாதம் வருகை தர உள்ளது. சென்னையை பொருத்த வரை வரும் பிப் 21ஆம் தேதி தொடங்கி மார்ச் 7 ஆம் தேதி வரையில் அம்பத்தூர், போரூர், கோடம்பாக்கம், அண்ணாநகர், புரசைவாக்கம், மயிலாப்பூர், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இந்த ரதம் பயணிக்க உள்ளது. மேலும் திருவள்ளூரில் பிப் 22 ஆம் தேதியும் மற்றும் செங்கல்பட்டில் வரும் மார்ச் 4 ஆகிய தேதியிலும் ஆதியோகி ரதங்கள் வலம் வர இருக்கின்றன. திட்டமிட்ட படி அனைத்து பகுதிகளையும் வலம் வந்த பின்னர் இறுதியாக மார்ச் 8 ஆம் தேதி, மஹாசிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை இந்த ரதங்கள் வந்தடைய உள்ளன.
இதோடு, சிவ யாத்திரை எனும் பாத யாத்திரையையும் சிவாங்கா பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து சிவன் திருவுருவம் தாங்கிய 7 தேர்களை இழுத்தபடி மொத்தம் 7 குழுக்களாக, வருகின்றனர். பிப்ரவரி 16 அன்று தொடங்கப்படும் இந்த யாத்திரை மார்ச் 6 ஆம் தேதி கோவை ஈஷா யோக மையத்தில் முடிவடைய உள்ளது.
மேலும் கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே வேளையில், மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 36 இடங்களில் மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கும் பக்தர்கள் திரளாக பங்கேற்க இருக்கிறார்கள். அவர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட உள்ளது. அதுமட்டுமின்றி, கோவைக்கு வர விரும்பும் வெளி மாவட்ட மக்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது அவரோடு திரு. சீனிவாசன், வழக்கறிஞர் இந்து மற்றும் மருத்துவர் திரு. பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்
0
0