என்னது, ரூ.61 ஆயிரம் மின்கட்டணமா..? பில்லை பார்த்து அதிர்ந்து போன ஓட்டல் உரிமையாளர்..!!

Author: Babu Lakshmanan
23 September 2023, 10:34 am
Quick Share

தூத்துக்குடி ; வல்லநாடு அருகே ஹோட்டல் கடையில் 61 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்ததால் கடை உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள புத்தனேரியைச் சேர்ந்தவர் பூபதிராஜா. இவர் திருநெல்வேலி & தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் வசவப்பபுரத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இரண்டு மின் இணைப்புகளுடன் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக இந்த கடையை நடத்தி வந்த இவர், கடந்த வருட இறுதியில் மேலும் ஒரு மின் இணைப்புடன் ஹோட்டலில் டீக்கடை தனியாக நடத்தி வருகிறார்.

இந்த இணைப்புக்கு கடந்த 8 மாதமாக மின் கட்டணம் கட்டப்பட்டு வருகிறது. இதில் முதல் 2 மின் கட்டணமும் சரியான அளவில் ரூபாய் 413 மட்டும் கட்டவேண்டும் என்று கூறப்பட்டது. அதை பூபதி ராஜா கட்டியுள்ளார். இதற்கிடையில் கடந்த மாதத்திற்கான கட்டணம் ரூபாய் 40 ஆயிரம் கட்ட வேண்டும் என்று மின் கட்டணம் அளவீடு செய்தவர் கூறிச் சென்றதால் அதிர்ச்சி அடைந்த பூபதி ராஜா, இதுகுறித்து வல்லநாடு மின்வாரிய அலுவலரிடம் நேரில் சென்று கேட்டார்.

அதற்கு டெபாசிட் பணத்தை கழித்து நீங்கள் 26 ஆயிரம் மட்டும் கட்டுங்கள் என்று கூறியுள்ளார். வேறு வழியின்றி அதை கட்டி விட்டு வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில், இந்த மாதத்திற்கு மின்கட்டணம் எடுக்க வந்த மின்வாரிய ஊழியர் மின் கட்டணத்தை அளவீடு செய்து, இந்த டீ கடைக்கு மட்டும் ரூபாய் 61 ஆயிரம் மின் கட்டணம் வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த பூபதிராஜா மீண்டும் வல்லநாட்டில் உள்ள மின் வாரிய அலுவலரிடம் சென்று இதுகுறித்து கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் அதற்கு முறையான பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், சோர்வடைந்த பூபதிராஜா இதுகுறித்து தூத்துக்குடியில் உள்ள அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையில், நேற்றைய தினம் மின்வாரிய ஊழியர் ஒருவர் கடைக்கு வந்த இந்த கட்டணத்தை நீங்கள் கட்டாயம் கட்ட வேண்டும் என்றும் இல்லை என்றால் மின் இணைப்பை துண்டித்து விடுவோம் என்று எச்சரித்துள்ளார். மேலும், முதலில் இருந்த இரண்டு மின் இணைப்புகளுக்கும் ரூபாய் 12 ஆயிரம் மட்டும் 2 ஆயிரம் என வந்துள்ளது. இந்த இரண்டு இணைப்புகளில் மட்டும் தான் போர்வெல், மிக்ஸி, கிரைண்டர் போன்ற அதிக அளவு மின் எடுக்கும் பொருட்கள் ஓடுகிறது.

இந்த புதிய இணைப்பில் 6 பேன் மற்றும் 6 லைட் மட்டுமே எரிவதாகவும், கடந்த வருடமே மீட்டர் வேகமாக ஓடுவதாகவும், இதை உடனே மாற்றித்தர வேண்டும் என்றும் பூபதிராஜா மனு அளித்துள்ளார். ஆனால், அதை கண்டுகொள்ளாத மின்வாரிய ஊழியர்கள் தற்போது 61 ஆயிரம் ரூபாய் கட்டித்தீர வேண்டும் என்று வற்புறுத்துவதாக வேதனை தெரிவிக்கிறார் பூபதிராஜா.

Views: - 271

0

0