EMI கட்ட சொல்லி வாடிக்கையாளர்களை வற்புறுத்தும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம்.!!

23 May 2020, 3:23 pm
Tirupur Bajaj - Updatenews360
Quick Share

திருப்பூர் : பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் பொதுமக்களுக்கு கொடுத்த பணத்திற்கு வட்டிக்கு மேல் வட்டி கேட்டு சிரமப்படுத்துவதாகவும் , 3 மாத தவண தொகை செலுத்த அவகாசம் கொடுக்கவில்லை என்று வாடிக்கையாளர்கள் புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது மே 31-ஆம் தேதி வரை நான்காம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது . தொழில் நகரமான திருப்பூரில் ஊரடங்கு காரணமாக தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் பலர் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வங்கிகளில் வாங்கியுள்ள கடன்களான இஎம்ஐ கட்டுவதற்கு ரிசர்வ் வங்கி 3 மாத காலக்கெடு வழங்கியுள்ளது . கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று மாதம் வரை இஎம்ஐ கேட்டு வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என அறிவித்து இருந்தது . இந்நிலையில் திருப்பூர் அவினாசி சாலையில் செயல்பட்டு வரும் பஜாஜ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இஎம்ஐ தொகையை கட்டுமாறு அழைபேசி வாயிலாக கூறி வந்துள்ளனர். ரிசர்வ் வங்கி கூறிய விதிகளின் படி ஆன்லைன் மூலம் இ.எம்.ஐ கட்ட அவசாகம் கேட்டு விண்ணப்பம் செய்திருந்த வாடிக்கையாளர்களுக்கும் அழைபேசி மூலம் அழைத்து மாத தொகை கட்ட சொல்லியுள்ளனர்.

மேலும் வங்கிகளில் போதுமான இருப்பு இல்லாத வாடிக்கையாளர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு இஎம்ஐ கட்டணத்தைச் செலுத்துமாறு வற்புறுத்தி வந்துள்ளதுனர். ஊரடங்கு காரணமாக வேலை இழந்து தவித்து வரும் தொழிலாளர்கள் இதுபோன்று வங்கியிலிருந்து இஎம்ஐ கட்டுவதற்கு குறுந்தகவல் மற்றும் தொலை பேசியில் அழைப்பு விடுத்ததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள பஜாஜ் நிறுவனத்தை நேற்று முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக நேற்று வங்கி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ராஜபாண்டி என்பவர் கூறுகையில் , புதிய செல்போன் வாங்க பஜாஜ் நிறுவனம் மூலம் கடன்பெற்றதாகவும் , ஊரடங்கிற்கு முன்பு வரை முறையாக மாத தவனை செலுத்தி வந்ததாகவும் , அதன் பின் மூன்று மாத தவணைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்ததாகவும் கூறுகிறார். ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்திருந்தாலும் , பஜாஜ் நிறுவனத்தில் இருந்து அழைத்து மாத தவனை செலுத்த கூறிய போது , 3 மாதங்களுக்கு கட்டாமல் இருக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்திருந்ததை கூறியுள்ளார். இருப்பினும் அதை ஏற்க மறுத்து , கட்டியாக வேண்டும் என நிர்பந்தப்படுத்தியுள்ளனர்.

இவர் , தனது வங்கி கணக்கில் மருத்துவ செலவிற்காக வைத்திருந்த பணத்தையும் பஜாஜ் பைனான்ஸில் எடுத்துள்ளனர். இன்னும் சில வாடிக்கையாளர்களுக்கு , தொகைஇருப்பு இல்லாத வங்கி கணக்கில் செக் போட்டதால் , செக் பவுன்ஸ் ஆகி , இருக்கும் தொகையில் மைனஸ் அளவிற்கு சென்றுள்ளது. இது தொடர்பாக புகார் தெரிவிக்க சென்றாலும் , முறையான பதில்கள் இல்லை என்றே கூறுகின்றனர் வாடிக்கையாளர்கள். 30 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் நேற்று திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள பஜாஜ் பைபான்ஸின் முன்பு , ஊழியர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் , வாடிக்கையாளர்களிடம் புகார் மனு ஒன்றை வாங்கி சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பஜாஜ் பைனான்ஸிடம் கேட்க முயற்சி செய்த போதும் , முறையான பதில் எதுவும் இல்லை. காவல்துறை தரப்பில் கேட்கும் போது , வாடிக்கையாளர்கள் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் என இரு தரப்பிடமும் விசாரனை செய்த பின் தான் இது குறித்து கூற முடியும் என முடித்துக்கொண்டனர்.