இன்னமும் வடியாத வெள்ளம்… படகு மூலம் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் ; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

Author: Babu Lakshmanan
11 December 2023, 7:25 pm
Quick Share

பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வெள்ளம் இன்னும் வடியாததால், பொதுமக்கள் படகு மூலம் பயணித்து வருகின்றனர்.

மிக்ஜாம் புயல் தாக்கத்தின் காரணமாக கடந்த வாரம் கொட்டி தீர்த்த கன மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தற்போது மழைநீர் தேங்கிய பகுதிகளில் எல்லாம் மழை நீர் வடிந்த நிலையில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால், பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட யமுனா நகர் பகுதி மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக, இந்த பகுதியில் இன்னும் குடியிருப்புகளை சுற்றிலும் இடுப்பளவு தண்ணீர் தேங்கி இருப்பதால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. கடந்த ஒரு வார காலமாக பள்ளிக்கு விடுமுறை என்பதால் வீட்டிலேயே இருந்த பொதுமக்கள் இன்றைய தினம் பள்ளி தொடங்கி இருப்பதால் தங்களது பிள்ளைகளை அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட படகுமூலம் பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், தரை தளத்தில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்த மழை நீர் இன்னும் வடியாததால் மாடியில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு தயார் செய்து ஏணி மூலம் கீழே இறக்கி ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெரிய படகுகள் மூலம் கரைக்கு வந்து பிள்ளைகளை அனுப்பி விட்டு, மீண்டும் அதே படகில் வீட்டிற்கு செல்கின்றனர்.

தற்போது, ஒவ்வொரு வீட்டின் முன்பும் தயார் செய்து வைத்திருந்த தெர்மாகோல் படகில் ஆபத்தான முறையில் வந்ததால் பொதுமக்கள் வெளியே வந்து செல்ல பெரிய அளவிலான படகு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பகுதிக்கும் பஸ் சர்வீஸ் போல் தற்போது இந்த பகுதியில் வடியாத மழை நீரால் படகு சர்வீஸ் செய்யப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி அருகில் இருப்பதால் இந்த பகுதியில் தண்ணீர் எடுக்க ஊற்று போல் வருவதாகவும், அந்த பகுதியில் முறையான வடிகால் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 256

0

0