மின்சார திருத்த சட்ட மசோதாவை எதிர்க்க காரணம் என்ன தெரியுமா..? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!

Author: Babu Lakshmanan
11 August 2022, 5:11 pm
Quick Share

மின்சர திருத்த சட்ட மசோதாவை தமிழக அரசு எதிர்க்க காரணம் என்ன..? என்பது குறித்து தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என தமிழக முதல்வர் நேற்று மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கூட்டத்தில் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் இன்று கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அப்பள்ளியில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உள்ளிட்ட வருவாய் அலுவலர்கள், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது :- தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை முழுவதுமாக கட்டுப்படுத்துவதற்கு நேற்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தை முதல்வர் நடத்தி மிக கண்டிப்பான உத்தரவுகளை அரசு அதிகாரிகளுக்கு வழங்கி இருக்கிறார்கள். தமிழகத்தில் எந்த இடத்திலும் போதை பொருட்கள் நடமாட்டம் இல்லாத அளவிற்கு முழுமையாக தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என்பதற்காக முதல்வர் சீரிய நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன் அதன் அடிப்படையில் இன்று போதை பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதுவரை இல்லாத அளவிற்கு மக்கள் இயக்கமாக முதல்வர் எடுத்துள்ளார். நிச்சயமாக போதை பொருள் இல்லாத மாநிலமாக போதை பழக்கத்திற்கு ஆளாக ஒரு தமிழகமாக சிறப்பு மிக்க மாநிலமாக தமிழகத்தை முதல்வர் மாற்றிக் காட்டுவார். மின்சார திருத்த சட்ட மசோதாவை பொறுத்தவரை, நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டவுடன் நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மிகக் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார்கள்.

அவரது அழுத்தம் காரணமாகவே நாடாளுமன்றத்தில் ஸ்டேண்டிங் கமிட்டிக்கு திருத்த மசோதா அனுப்பப்பட்டிருக்கின்றன. அந்த மசோதா நடைமுறைக்கு வரும்பட்சத்தில் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் வழங்கக் கூடிய 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாயம், விசைத்தறி, குடிசைகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரம் முற்றிலும் பாதிக்கபடக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு கடன்களை பெற்று, அரசு நிதிகளை பெற்று, மக்களின் பங்களிப்புகளை பெற்று உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் முழுவதுமாக தனியாருக்கு எந்தவித கட்டணமும் செலுத்தாமல் அவர்கள் பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளன.

அதிகம் பயன்படுத்தக் கூடிய நுகர்வோருக்கும், தொழிற்துறை நிறுவனங்களுக்கும் அனுமதி பெற்று மின் நுகர்வோருக்கான அனுமதியை பெறுவார்கள். குறிப்பாக ஏழை மக்களுக்கு, அடித்தட்டு மக்களுக்கு குறைந்த அளவு பயன்படுத்தக் கூடிய மின் நுகர்வோருக்கு தனியார் துறை மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்க மாட்டார்கள். ஆகையால், ஒட்டுமொத்தமாக நாம் உருவாக்கிய கட்டமைப்பை தனியாருக்கு தாரை வார்க்கும் அந்த சூழல் தான் மின்சார திருத்த சட்ட மசோதாவில் இடம் பெற்றுள்ளன.

இந்திய பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்கள். நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு குரலை பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த மசோதாவை திரும்ப பெறும் வரை முதல்வர் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பார்கள் என்றார். கரூர் மாவட்டத்தில் உள்ள குளங்களுக்கு காவிரி மற்றும் அமராவதி ஆறுகளில் செல்லும் உபரி நீரை கொண்டு செல்வதற்கான ஆய்வு பணிக்கான நிதி சட்டமன்றத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நிச்சயமாக அனைத்து பெரிய ஏரிகளுக்கும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Views: - 273

0

0