பாடம் நடத்துவதை விட்டு விட்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ; கெளரவ விரிவுரையாளருக்கு பாடம் புகட்டிய மாணவர்கள்…!!

Author: Babu Lakshmanan
26 August 2023, 9:27 pm
Quick Share

திருச்சி அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி கெளரவ விரிவுரையாளரை மாணவர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. லால்குடியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள இந்த கல்லூரியில் தற்போது 700 மாணவ, மாணவர்கள் படித்து வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த வினோத்குமார் (43) என்பவர் இக்கல்லூரியில் வணிகவியல் துறையில் கெளரவ விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். திருச்சி ஈ.வே.ரா கல்லூரியில் இருந்து, கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு குமுளூர் அரசு கலைக் கல்லூரிக்கு வினோத்குமார் மாற்றப்பட்டார். இந்நிலையில், இக்கல்லூரியில் படித்து வரும் சில மாணவிகளுக்கு வினோத்குமார் செல்போனில் எஸ்எம்எஸ், வாட்ஸ் அப் மூலம் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவல் கல்லூரி முழுவதும் பரவியதால் மாணவர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, 24ம்தேதி காலை வழக்கம் போல் கல்லூரி இயங்கி வந்த போது, வினோத்குமார் வணிகவியல் துறை அறையில் கெளரவ விரிவுரையாளர் இருந்தார். அப்போது, வணிகவியல் துறை அறைக்குள் நுழைந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்களை அடித்து உடைத்து, வினோத்குமாரை தாக்கினர். இதில் அவர் மயங்கி விழுந்தார்.

தகவலறிந்த லால்குடி ஆர்டிஓ சிவசுப்ரமணியன், டிஎஸ்பி அஜய் தங்கம், இன்ஸ்பெக்டர்கள் உதயகுமார், கார்த்திகேயனி ஆகியோர் கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து, 200க்கு மேற்கொண்ட மாணவ, மாணவிகள் கல்லூரியில் முன்பு நின்று விரிவுரையாளர் வினோத்குமாரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் ஆர்டிஓ சிவசுப்ரமணியன், டிஎஸ்பி அஜய் தங்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வினோத்குமார் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை தொடர்ந்து, மாணவர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டனர்.

மாணவி கொடுத்த புகாரின் பேரில் வினோத்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும், மாணவர்கள் தாக்கியதில் காயமடைந்த வினோத்குமாருக்கு லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Views: - 425

0

0