திடீரென மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு… சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் ; அரசுப் பள்ளியில் அதிர்ச்சி ..!!

Author: Babu Lakshmanan
15 November 2023, 12:47 pm
Quick Share

அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று வந்த மாணவன் பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியதால் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் – அம்மனின் தம்பதியினர். கூலித்தொழிலாளர்களான அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்த நிலையில், அவர்களுடைய இரண்டாவது மகன் மாரிமுத்து என்பவர் அறந்தாங்கி அடுத்த பெருங்காடு கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

மாணவன் மாரிமுத்து வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற நிலையில், அங்கு நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியின் முடிவிற்கு பிறகு பள்ளி கட்டிடத்தின் மாடியில் உள்ள தனது வகுப்பறையில் இருந்து வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதற்காக புத்தகப்பையை எடுத்துக்கொண்டு படிகளின் வழியே இறங்க முயற்சி செய்தபோது, மாணவன் மயங்கி விழுந்துள்ளார். கீழே விழுந்த மாணவன் மாரிமுத்துவிற்கு தலையில் அடிபட்ட நிலையில் அவரை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால் அவரை சோதித்து பார்த்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இத்தகவல் அறிந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்கள் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதனை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் ஆவுடையார்கோவில் காவல்துறையினர் பெருங்காட்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு சென்று அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்வு செய்து விசாரணை செய்து செய்து வருகின்றனர். பள்ளியில் பயின்று வந்த மாணவன் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Views: - 281

0

0