இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் மக்கள் வாழ வாழ்த்துக்கள் – முதல்வர் பழனிசாமி விநாயகர் சதுர்த்தி வாழ்த்து..!

21 August 2020, 10:01 am
Quick Share

விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்படுவதையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் மக்கள் அதற்காக தயாராகி வருகின்றனர். கொரோனா தொற்று அச்சம் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் அவரவர் வீடுகளில் இருந்து கொண்டாட வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது.

ஆனால், இதற்கு இந்து முன்னணி மற்றும் பாஜக போன்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த சூழலில் மக்களின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பல்வேறு கட்ட விவாதங்கள், நீதிமன்றத்தில் வழக்கு போன்றவற்றை எல்லாம் கடந்து நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த சூழலில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், விநாயகரின் அவதாரத் திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்களில் களிமண்ணால் ஆன சிலைகளை வைத்து வழிபடுவர்.

‘வினைகளின் வேரையே களைந்தெறியும் வல்லவர் விநாயகர்’ என பதினோறாம் திருமுறையில் பாடப்பட்டுள்ளது. விநாயகர் அருளால் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் மக்கள் வாழ வாழ்த்துகள். என தெரிவித்துள்ளார்.