கேள்வி கேட்டதால் ஆத்திரம்… விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலர் ; கிராம சபைக் கூட்டத்தில் சலசலப்பு..!!

Author: Babu Lakshmanan
2 October 2023, 5:26 pm
Quick Share

விருதுநகர் அருகே கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை ஊராட்சி செயலர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காந்தி ஜெயந்தி முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பிள்ளையார்குளம் ஊராட்சி கங்காகுளம் பகுதியில் கிராம சபை கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த விவசாயி அம்மையப்பர் என்பவர் சுழற்சி முறையில் அனைத்து பகுதிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவித்தார். மேலும், அவர் பேசும்போது ஊராட்சி செயலர் தங்கபாண்டியனை மாவட்ட ஆட்சியர் மாற்றி 4 மாதம் ஆகிவிட்டது, ஏன் மீண்டும் ஊராட்சி செயலர் இங்கு வந்துள்ளார் என கேள்வி எழுப்பினார்.

உடனே பிள்ளையார்குளம் ஊராட்சி செயலர் தங்கபாண்டியன், விவசாயி அம்மையப்பரை காலால் எட்டி உதைத்தார். மேலும் ஊராட்சி செயலருக்கு ஆதரவாக மற்றொரு நபரும் அந்த விவசாயியின் கன்னத்தில் அறைந்தார்.இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கிராம மக்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.

ஊராட்சி செயலர் தங்கபாண்டியன் காலால் எட்டி உதைத்த நிலையில், காயம் அடைந்த விவசாயி அம்மையப்பர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 497

0

0