வாட்டர் ஹீட்டரால் வந்த வினை : ஒன்றரை வயது குழந்தை பலி!!

1 September 2020, 1:41 pm
Thirupathur Baby Dead- Updatenews360
Quick Share

திருப்பத்தூர் : வாணியம்பாடி அருகே வாட்டர் ஹீட்டரில் கைவைத்த குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பவித்ரா. இவருக்கும் ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி ஒன்றரை வயதில் அனன்யா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேல்பள்ளிப்பட்டில் உள்ள தாய் வீட்டிற்கு குழந்தையுடன் வந்த பவித்ரா இரண்டு நாட்களாக அங்கேயே தங்கி உள்ளார். இந்நிலையில் இன்று காலை பவித்ரா குளிப்பதற்காக மின்சார தண்ணீர் வெப்பபடுத்த வாட்டர் ஹீட்டரை குடத்தில் பொருத்தி வைத்து வெந்நீர் காயவைத்து கொண்டு இருந்தார்.

அப்போது வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த ஒன்றரை வயது குழந்தை அனன்யா தவறுதலாக தண்ணீரில் கையை வைத்த போது மின்சாரம் தாக்கியதில் குழந்தை மயங்கி விழுந்தது.குடம் கீழே விழுந்த சப்தம் கேட்ட தாய் மற்றும் உறவினர்கள் குழந்தையை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர் . சம்பவம் அறிந்து வந்த வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் குழந்தையின் உடலை கைபற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாணியம்பாடி அருகே பெற்றோரின் கவனக்குறைவால் திறந்தவெளியில் வாட்டர் ஹீட்டரை பயன்படுத்தி குழந்தையின் உயிரை பறிகொடுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 5

0

0