இந்த விஷயத்துல எதுக்கு பாரபட்சம்? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை!!
Author: Udayachandran RadhaKrishnan20 August 2021, 1:17 pm
மகப்பேறு விடுப்பில் பாரபட்சம் காட்டக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பணி வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியாக தமிழக அரசு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசாணையை அமல்படுத்த கோரிய வழக்கறிஞர் ராஜகுரு வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்காலிக பணியாளர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்குவது குறித்த அரசாணையை அமல்படுத்த வழக்கு தொடுக்கப்பட்டது.
இதனிடையே, அரசு பணியில் உள்ளர்வர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 1980ஆம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தை கடந்த 2011ஆம் ஆண்டில் 6 மாதங்களாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உயர்த்தினார். இதன்பின் 9 மாத காலமாக உயர்த்தப்படும் என்று 2016ஆம் ஆண்டில் அவர் சட்டப்பேரவை விதி 110 கீழ் அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து இந்த மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் நடைபெற்ற சட்டப் பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையில் மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
0
0