பெண்ணை அரிவாளால் வெட்டி கொன்ற வழக்கு : தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிக்கு ஆயுள் தண்டனையுடன் 10 ஆண்டு சிறை!!

Author: Udayachandran RadhaKrishnan
27 October 2021, 6:23 pm
Tamil Puligal - Updatenews360
Quick Share

தேனி : போடியில் பெண்ணை கொலை செய்ததுடன், அவரது மகனையும் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்ட நபருக்கு ஆயுள் தண்டனையுடன் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

தேனி மாவட்டம் போடி வினோபாஜி காலனியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 51). இவர் தமிழ்ப் புலிகள் கட்சியின் தேனி மாவட்ட துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு மாரியப்பனின் அண்ணன் மகள் உமா என்பவரை அவரது உறவினரான செல்வம் என்பவர் கிண்டல் செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக செல்வத்தின் வீட்டிற்கு ஆத்திரத்துடன் சென்ற மாரியப்பனுக்கும் செல்வத்துக்கும் அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறை விலக்கச் சென்ற செல்வத்தின் தாயார் மீனாட்சி(வயது 55) என்பவரை மாரியப்பன் அரிவாளால் பலமாகத் தாக்கியதில் படுகாயம் அடைந்து பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பலியானார்.

மேலும் மாரியப்பன் அரிவாளால் தாக்கியதில் செல்வமும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் உயிர் தப்பினார். இந்த விவகாரம் தொடர்பாக உயிரிழந்த மீனாட்சியின் இளைய மகன் காவேரிராஜா கடந்த 2015 ஆம் ஆண்டு போடி காவல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மாரியப்பன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தேனி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,

இன்று நடைபெற்ற இறுதி விசாரணையில் மாரியப்பன் குற்றவாளி என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி மாரியப்பனுக்கு கொலை வழக்கிற்காக ஆயுள் தண்டனையுடன் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், அபராதத் தொகையைக் கட்டத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு காலம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

மேலும் செல்வத்தை கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்கிய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் அபராதத் தொகையை கட்டத்தவறினால் மேலும் மூன்று மாத கால சிறைத்தண்டனையும் விதிக்கப்படுவதாக நீதிபதி சாந்தி செழியன் தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து குற்றவாளி மாரியப்பன் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Views: - 311

0

0