‘அவசர சிகிச்சைக்கு வந்தா… அட்ரெஸ் தான் கேட்பீங்களா..?’… செவிலியர்களிடம் இளைஞர் வாக்குவாதம்..!!

Author: Babu Lakshmanan
28 June 2023, 4:44 pm
Quick Share

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அரசு பேருந்து மோதி படுகாயமடைந்த நபருக்கு சிகிச்சை அளிக்காமல், முகவரி கேட்டு காலம் தாழ்த்தியதாக செவிலியர்களிடம் இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் செருப்பாலூர் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியம் (50). கூலி தொழிலாளியான இவர் தக்கலை அருகே மேட்டுக்கடை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த அரசு பேருந்து ஒன்று ஆரோக்கியம் மீது மோதியுள்ளது. இதில், இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அவர் படுகாயமடைந்த நிலையில், அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மீட்டு சிகிட்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால், படுகாயமடைந்து ரத்தம் சொட்ட சொட்ட இருந்த ஆரோக்கியத்திற்கு செவிலியர்கள் முதலுதவி கூட செய்யாமல், முகவரியை கேட்டு காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் செவிலியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தக்கலை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராஜையன் அவர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட போது, தனது கவனத்திற்கு வரவில்லை என்றும், உடனடியாக விசாரித்து ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி உரிய சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்வதோடு, செவிலியரிடமும் விசாரணை நடத்தப்படும், என விளக்கமளித்தார்.

Views: - 284

0

0