காவல்நிலையம் முன்பு வாலிபர் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி : முதல் மனைவியுடன் சேர்த்து வைக்கக் கோரிக்கை..!
11 September 2020, 12:53 pmதிண்டுக்கல் : தனது முதல் மனைவியுடன் சேர்த்து வைக்கக் கோரி, காவல்நிலையம் முன்பு வாலிபர் ஒருவர் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள பூசாரிபட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன். கூலித் தொழிலாளியான இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். பணி நியமர்த்தமாக, வெளியூர் சென்று தங்கி வேலை பார்த்து வருவதால், கோபி செட்டி பாளையத்தில் ஜெயந்தி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, 2வதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கும் 2 குழந்தைகள் உள்ளன.
இதனிடையே, கொரோனாவால் வேலையில்லாததால், பாலமுருகன் பூசாரிபட்டிலேயே தங்கி விட்டார். இதனால், கணவனை காண ஜெயந்தி, பூசாரிபட்டிக்கே வந்துள்ளார். அப்போது, பாலமுருகன் 2வது திருமணம் செய்து கொண்டது முதல் மனைவியான ரேவதி வீட்டாருக்கு தெரிய வந்தது. இதனால், ஏமாற்றமடைந்த குடும்பத்தினர் ரேவதியை சொந்த ஊரான உசிலம்பட்டிக்கே அழைத்துச் சென்று விட்டனர்.
முதல் மனைவி பிரிந்ததால் மனமுடைந்த பாலமுருகன், நிலைகுலைந்து போகும் அளவிற்கு குடித்து விட்டு, வத்தலகுண்டு காவல்நிலையத்திற்கு சென்றார். அங்கு, தனது மனைவியை சேர்த்து வைக்குமாறு கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக மனு எழுதி தருமாறு போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து, காவல்நிலையத்திற்கு வெளியே வந்த அவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுக்க முயன்றார்.
இதனை கண்ட ஏட்டு மஞ்சுளா, தற்கொலைக்கு முயன்ற பாலமுருகனை தடுக்க முற்பட்டார். அப்போது, அவரது கையில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் பவுலோஸ் பாலமுருகனிடம் நைசாக பேசி கத்தியை வாங்கினார். தொடர்ந்து கழுத்திலும், கையிலும் காயமடைந்த பாலமுருகன் மற்றும் ஏட்டு மஞ்சுளாவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
0
0