2 வயது குழந்தையை சுவற்றில் அடித்துக் கொன்ற தந்தை… மனைவியுடன் எழுந்த சண்டையால் கொடூரச் செயல்..!!

Author: Babu Lakshmanan
19 April 2022, 5:09 pm
Quick Share

தூத்துக்குடி அருகே கணவன் – மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், இரண்டே கால் வயது குழந்தையை சுவற்றில் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மேற்கு காமராஜ் நகர் பகுதியை சார்ந்த ஸ்டெபி (28). இவரது முதல் கணவர் கிஷோர் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு கேத்ரினா என்னும் 2 1/4 வயது மற்றும் கிறிஸ்டினா (5) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக திருமண தகவல் மையம் மூலமாக டேவிட் (32) என்பவருடன் திருமணமாகி உள்ளது. டேவிட் தூத்துக்குடியில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் டேவிட்டுக்கு ஸ்டெபிக்கு இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு குடி போதையில் வந்த டேவிட் ஸ்டேபியிடம் தகராறு செய்து சண்டை போட்டுள்ளார். இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஸ்டெபியை கடுமையாக தாக்கியுள்ளார். அப்பொழுது தொட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த ஸ்டெபியின் இரண்டாவது பெண் கேத்ரீனா 2 1/4 வயது குழந்தையை சுவற்றில் அடித்ததில், குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தது.

இதை தொடர்ந்து, அவர்களின் குக்குரல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் ஜெயந்தி இறந்து கிடந்த பெண் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

பலத்த காயமடைந்த ஸ்டேபியை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து டேவிட்டை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 617

0

0