துரைமுருகன் மீண்டும் தூது : அழகிரி வைத்த இறுதி கெடு!!

3 February 2021, 8:59 pm
alagiri - durai - cover - updatenews360
Quick Share


திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், அவருடைய அண்ணன் அழகிரிக்கும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேல் அரசியல் ரீதியாக மோதல் இருப்பது தெரிந்த விஷயம். கடந்த மாதம் 3-ம் தேதி மதுரையில் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய அழகிரி, தம்பி ஸ்டாலின் தனக்கு இழைத்த துரோகங்களை பட்டியலிட்டு ஒரு சபதமும் செய்தார். ஸ்டாலின் முதல்வர் ஆகவே முடியாது. அது ஒரு போதும் நடக்கவே நடக்காது என்று அடித்துக் கூறினார்.

அழகிரிக்கு எப்போதுமே ஒரு சுபாவம் உண்டு. மனதுக்குள் வைத்திருப்பதை வெளிப்படையாக சொல்லத் தயங்க மாட்டார். அதை பட்டென்று போட்டு உடைத்தும் விடுவார். தான் எடுத்த சபதத்தை நிறைவேற்றுவதற்கு கலைஞர் திமுக என்னும் கட்சியை அவர் தொடங்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஜனவரி 30-ம் தேதி அழகிரியின் பிறந்த நாளன்று இந்த புதிய கட்சி உதயமாகும் என்று கூறப்பட்டது.

MK Alagiri- Updatenews360

அழகிரியின் கட்சி நடிகர் ரஜினி மக்கள் மன்றத்தினருடன் இணைந்து செயல்பட வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்பட்டது. மதுரை வரும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை அவர் சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இதனால் அவருடைய பிறந்த நாள் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. என்றபோதிலும் அழகிரி தனது பிறந்த நாளன்று எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் அவருடைய ஆதரவாளர்கள் ‘சேர்த்தால்
உதயம்… தவிர்த்தால் அஸ்தமனம்’ என்ற பஞ்ச் டயலாக்குடன் மதுரை முழுவதும் போஸ்டர்களை ஒட்டி தூள் கிளப்பினர்.

இது திமுக தலைமைக்கு எச்சரிக்கையும், சவாலும் விடுப்பதுபோல் இருந்தது. இந்த போஸ்டரில் உள்ள முதல் வாசகத்தை கூர்ந்து கவனித்தால் அழகிரி திமுகவில் சேர்வதற்கு தயாராகவே இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது.

இதுபற்றி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு முன்பே நன்றாக தெரியும். ஏனென்றால் அவர்தான் சமீபகாலமாக அழகிரியிடம் மறைமுகமாக பேசி, தேர்தல் நேரத்தில் ஏடாகூடமாக ஏதாவது செய்து கட்சியை தோற்கடிக்கும் வேலையில் ஈடுபட்டு விடாதீர்கள் என்று வேண்டிக்கொண்டு வருபவர். அழகிரி தனது ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசியதிலிருந்தே அவரை சமாதானப்படுத்தும் வேலையில் இடைவிடாமல் முயற்சித்துக் கொண்டேயும் இருந்தவர்.

stalin - duraimurugan - updatenews360

இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருந்தது.
திமுகவின் அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் தேர்தலில் போட்டியிட 50 சதவீதக்கும் மேலான இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருவதுதான். இதனால், கட்சிக்காக 40, 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்த சீனியர் தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிட குறைவான வாய்ப்பே கிடைக்கும் என்பதையும் துரைமுருகன் உணர்ந்துள்ளார்.

தனக்கே இந்த தேர்தலில் சீட் கிடைப்பது கஷ்டம் என்பதும் அவர் அறிந்த ஒன்று. இதனால் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத சீனியர் தலைவர்கள் அழகிரியின் பக்கம் சென்று தேர்தலில் திமுகவின் காலை வாரி விட்டு விடக்கூடாது என்கிற பயமும் அவருக்கு வந்தது. மேலும் இப்படி ஓரங்கட்டப்படும் சீனியர் தலைவர்கள் திமுக வேட்பாளர்களுக்கு எதிராகவே களம் காணும் வாய்ப்பும் உருவாகும் என்பது துரைமுருகனுக்கு நன்கு தெரியும்.

இதைத்தொடர்ந்து, தனது தூதர்கள் மூலம் அவர் மூன்று உறுதிமொழிகளை தரும்படி அழகிரியிடம் கேட்டுக் கொண்டார் என்கிறார்கள். திமுகவை தோற்கடிப்பதற்காக தனிக்கட்சி தொடங்க கூடாது. ஜே.பி. நட்டா உள்ளிட்ட பாஜகவின் எந்த தலைவர்களையும் சந்திக்க கூடாது. தேர்தல் முடியும் வரை அமைதி காக்க வேண்டும் என்பதுதான் அந்த மூன்று அந்த வாக்குறுதிகள்.

அப்போது பதிலுக்கு துரை முருகனிடம் அழகிரி முன்வைத்த கோரிக்கைகள் இரண்டே இரண்டு தான். கட்சியில் எனக்கு எந்தப் பதவியும் தேவையில்லை. திமுக அறக்கட்டளையில் எனது மகன் தயாநிதி அழகிரிக்கு ஒரு பொறுப்பு தரவேண்டும். அதேபோல் வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட அவருக்கு ஒரு வாய்ப்பும் வழங்க வேண்டும். எனது இந்த கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றித் தந்தால் நான் அமைதி காக்கிறேன் என்று அழகிரி உறுதியளித்துள்ளார்.

அதே நேரம் அழகிரியிடம் எப்போதுமே முன்னெச்சரிக்கை உணர்வு உண்டு. துரை முருகனின் உறுதிமொழிகள் வெறும் வாய் வார்த்தையோடு நின்று விடக்கூடாது என்பதற்காக அவர் தன் பங்கிற்கு மேலும் ஒரு நிபந்தனையை விதித்தார்.

ஒருவேளை, திமுக ஆட்சியை பிடித்துவிட்டால் தேர்தலுக்கு பின்பு நம்மை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பது அவருக்கு தெரியும். அதனால் அவர் எனக்கு பிப்ரவரி 28-ம் தேதிக்குள் தயாநிதி அழகிரியை திமுக அறக்கட்டளையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் தேர்தலில் போட்டியிடுவதையும் உறுதி செய்யவேண்டும். இல்லையென்றால் சும்மா இருக்க மாட்டேன். எனது வேலையை காட்டுவேன் என்று ஆவேசமாக கூறியிருக்கிறார். துரை முருகனும் இதற்கு ஒப்புக் கொண்டதாகவே கூறப்படுகிறது.

அதனால்தான் தனது பிறந்த நாளன்று மதுரை வந்த பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை அவர் சந்திப்பதாக இருந்த திட்டம் கடைசி நேரத்தில் ரத்து ஆனதாகவும், புதிய கட்சி தொடங்கும் எண்ணம் தற்காலிகமாக தள்ளிப்போடப்பட்டிருப்பதாகவும், அழகிரியின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இதைத்தொடர்ந்தே அழகிரியின் பிறந்தநாள் எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி வெறும் போஸ்டர் யுத்தத்துடன் முடிந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

அதேநேரம் அழகிரி வைத்த கோரிக்கைகளை எப்படியோ ஒருவழியாக ஸ்டாலினிடம் துரைமுருகன் கொண்டுபோய் சேர்த்திருக்கிறார். அதைக்கேட்டு, ஸ்டாலின் மட்டுமல்ல அவருடைய குடும்பமே அதிர்ந்து போனதாம். நீங்கள் கொஞ்சம் அதிகமாகவே அழகிரியிடம் சமாதானம் பேசி விட்டீர்கள் என்று துரைமுருகனுக்கு செம டோசும் கிடைத்திருக்கிறது.

stalin -alagiri - updatenews360

சரி, ஏன் அழகிரி பிப்ரவரி 28-ம் தேதியை இறுதி கெடுவாக வைத்தார் என்ற கேள்வி எழுகிறதல்லவா? ஏனென்றால் மார்ச் 1-ம் தேதி ஸ்டாலினின் பிறந்தநாள். அதற்கு முன்பாகவே திமுகவில் இருந்து தனக்கு இனிப்பான செய்தி வரவேண்டும் என்று அழகிரி விரும்புகிறார்.

ஒருவேளை தான் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக, அவர் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என்று அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர். திமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Views: - 0

0

0