சோனியா ருத்ரதாண்டவம் : பல்டி அடித்த ஸ்டாலின்!!

21 January 2021, 5:44 pm
DMK - congress cover - updatenews360
Quick Share

காங்கிரஸ் தலைவர் சோனியா அமைதியான சுபாவம் கொண்டவர். அவர் முகத்தில் கோபக் கனலை காண்பது மிக மிக அரிது.
மனதில் கோபம் இருந்தாலும் அதை அதிகம் வெளியே காட்டிக் கொள்ளாதவர். அதை அரசியலிலும் கூட அப்படியே கடைபிடிப்பவர்.
யாரிடமும் அதிர்ந்து பேசாத குணமும் கொண்டவர்.

தனது கட்சிக்காரர்கள் மட்டுமின்றி கூட்டணி தலைவர்களையும் அவர் மரியாதையுடன் நடத்துபவர் என்றும் கூறுவார்கள். அப்படிப்பட்ட சோனியாவையே ஆவேசப் பட வைத்துவிட்டது அண்மையில் நடந்த புதுச்சேரி சம்பவம்.

Sonia 02 updatenews360

புதுச்சேரியில் அப்படி என்னதான் நடந்தது என்பது அரசியல் வட்டாரத்தில் உள்ள எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான். அண்மையில் அங்கு நடந்த மாநில திமுக நிர்வாகி கூட்டத்தில் அரக்கோணம் தொகுதி எம்பியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகன் புதுச்சேரியில் காங்கிரசுடன் உறவை முறித்துக் கொள்வதுபோல் தடாலடியாக பேசினார்.

“புதுச்சேரி காங்கிரஸ் தலைமையை நம்மை துளியும் மதிப்பதில்லை. அதனால் வருகிற சட்டப் பேரவை தேர்தலில் மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளிலும் திமுக தனது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறும். அப்படி நடக்கவில்லை என்றால் இந்த மேடையிலேயே நான் தற்கொலை செய்துகொள்வேன்” என கொந்தளித்து இருந்தது நினைவில் இருக்கலாம்.

கூட்டணிக் கட்சிகள் தங்களை மதிக்கவில்லை என்றால் அதை நாசூக்காக அல்லது சாடை மாடையாக குத்திக் காட்டிப் பேசுவதுதான் அரசியல் கட்சிகளின் வழக்கம். சிலநேரம் மறைமுகமாகவும் அக் கட்சியின் மேலிடத்துக்கு மிரட்டல் விடுப்பார்கள். ஆனால் இதையெல்லாம் தாண்டி ஜெகத்ரட்சகன், தான் ஒரு எம்பி, மத்திய அமைச்சரவையில் இருந்தவர் என்பதையெல்லாம் மறந்து கத்துக்குட்டி மேடைப்பேச்சாளர் போல்
பேசியது அவரிடம் அரசியல் நாகரிகம் இல்லை என்பதை காட்டுவதாக உள்ளது என்று அவர் மீது கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

அவர் பேசியது நான்கு சுவர்களுக்குள் அல்ல, நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள் கூட்டம். அதனால் ஜெகத்ரட்சகனின் இந்த ஆவேச பேச்சு அகில இந்திய அளவில் எதிரொலித்தது. இது புதுவை காங்கிரசுக்கு விடுக்கப்பட்ட சவால் அல்ல. காங்கிரசின் டெல்லி தலைமைக்கே விடுக்கப்பட்ட அறைகூவல் என்பதால் ஜெகத்ரட்சகனின் பேச்சை உடனடியாக சோனியாவின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
அவர் பேசிய பேச்சின் வீடியோ காட்சிகளையும் அனுப்பி வைத்தனர்.

பிரச்சனையின் வீரியத்தை உணர்ந்துகொண்ட சோனியா மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் ஜெகத்ரட்சகன் பேசியதை கேட்டு தெரிந்து கொண்டார். அடுத்த வினாடி அவர் கோபத்தின் உச்சிக்கே சென்றுள்ளார். அதன் பின் என்ன நடந்தது என்பது பற்றி டெல்லி காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் விவரித்த தகவல்கள் இங்கே அப்படியே தரப்படுகிறது.

“யாரை எப்படி அடித்தால் எங்கு வலிக்கும் என்பது சோனியாவுக்கு நன்றாகவே தெரியும். தனது 30 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் அதைக்கூட அவர் அறிந்து வைக்காமலா இருந்திருப்பார்?….

chidambaram updatenews360

கையில் செல்போனை எடுத்தவர் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப. சிதம்பரத்துக்கு அழைப்பு விடுத்தார். சிதம்பரமும் ஓரளவு விஷயம் என்னவாக இருக்கும் என்பதை யூகித்து வைத்து இருந்தார். சிதம்பரம் பேச ஆரம்பிக்கும் முன்பே சோனியா படபடவென பொரிந்து தள்ளிவிட்டார்.

“இந்த ஸ்டாலின் என்ன நெனச்சிட்டு இருக்கார். கூட்டணியை முறிக்கிற மாதிரி அவங்க ஆள வைத்து பேச வச்சிருக்கார். அந்தாளு ரொம்பவே ஓவரா பேசி இருக்கார். கருணாநிதி இருந்தப்ப இப்படி யாராவது பேசி இருப்பார்களா? எங்க இருந்து இந்த தைரியம் அவங்களுக்கு வந்துச்சு. நீங்கதான் திமுக இருந்தா பலமுன்னு சொல்லி சப்போர்ட் பண்ணி வர்றீங்க.

இப்படி நீங்க இடம் கொடுக்கிறதால்தான் நம்மை மிரட்டற மாதிரி பேசுறாங்க. இவங்க செஞ்ச ஊழலால் தான் 2014-ல் நாம ஆட்சியை பிடிக்க முடியாமல் போச்சு. அதையெல்லாம் மறந்துட்டு பேசுறாங்க. பிஜேபிக்காரங்க இன்றைக்கு வரைக்கும் அதைத்தானே பேசிட்டு இருக்காங்க. நீங்க என்ன செய்வீங்களோ, ஏது செய்வீங்களோ தெரியாது. உடனே ஸ்டாலின்கிட்ட பேசி இதுக்கு ஒரு முடிவு கட்டுங்க. இல்லைனா நடக்குறதே வேற.

லோக்சபாவில் நிறைய எம்பிக்கள் வச்சிருக்கோம் என்கிற ஆணவம் திமுகவுக்கு வந்து இருக்கிற மாதிரி தெரியுது. அதை கொஞ்சம் தட்டி வைங்க. இல்லையென்றால் ராகுலின் கோபம் இன்னும் அதிகமாகிவிடும். நாம இல்லாம தமிழ்நாட்டில் அவங்களால ஆட்சியை பிடிக்க முடியாது. கொஞ்சம் புரியும்படி அவங்களுக்கு சொல்லுங்க. ஸ்டாலின்கிட்ட இது பற்றி பேசிவிட்டு என்னிடம் தகவலை சொல்லுங்க…”.

மறுமுனையில் ப.சிதம்பரம் பதில் எதுவும் பேச முடியாதவாறு சோனியா இப்படி நிறைய கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டே போனார். ஒருநாளும் சோனியா இப்படி பேசியது இல்லையே என்று அதிர்ந்து போன சிதம்பரம், உடனடியாக ஸ்டாலினை தொடர்பு கொண்டிருக்கிறார். எதையும் மென்மையாக அணுகும் பக்குவம் கொண்ட சிதம்பரம், சோனியா தன்னிடம் சொன்ன தகவலை அதே உணர்ச்சி வேகத்தில் ஸ்டாலினிடம் கொட்டித் தீர்த்து இருக்கிறார்.

அதைக்கேட்ட ஸ்டாலின் ரொம்பவே பயந்துபோய் விட்டார். ஜெகத்ரட்சகன் விளையாட்டுக்காக அப்படி பேசியிருக்கலாம் என்று அசடு வழிந்த ஸ்டாலின், இனி இதைப் பற்றி மூச்சே விட மாட்டோம். நடந்ததை கெட்ட கனவாக மறந்து விடுங்கள் என்று சிதம்பரத்திடம் கெஞ்சிக் கூத்தாடியுள்ளார். பதிலுக்கு சிதம்பரம், சோனியா கிட்ட ஏதோ எனக்கு கொஞ்சம் நல்ல பேர் இருந்துச்சு. அதை இப்ப டோட்டலா டேமேஜ் ஆக்கிட்டீங்க என்று ஸ்டாலினிடம் புலம்பித் தள்ளி இருக்கிறார்.

ஒருவழியாக மன்னிப்பு கேட்காத குறையாக ஸ்டாலின் அந்தர் பல்டி அடித்து தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் உங்கள் தகுதிக்கு ஏற்ப சீட்டுகளை கொடுக்கிறோம். புதுச்சேரியிலும் பழைய மாதிரியே கூட்டணி அமைத்துக் கொள்வோம். இந்த பிரச்சினையை இத்தோட விட்டுடுங்க அப்படின்னு மன்றாடி இருக்கார்.

இதை அப்படியே சோனியாவிடம் கொண்டு வந்தார் சிதம்பரம். அதன்பிறகே சோனியா அமைதியானார். இப்படி காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் சோனியா, சிதம்பரம், ஸ்டாலின் மூவருக்கும் இடையே தனித்தனியாக நடந்த போன் உரையாடல் பற்றிய தகவல்களை பகிர்ந்துகொண்டனர். தற்போது இப்பிரச்சனை அப்படியே அமுங்கிப் போய் இருப்பதாக தோன்றினாலும் எப்போது இது எரிமலையாக வெடிக்கும் என்பது தெரியாது.

ஏனென்றால் வெட்டி விடுவதுபோல் திமுக பேசி விட்டதால் இனி ஒட்டுவது வெகு கடினம். அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா… என அரசியல்வாதிகள் வேண்டுமானால் கூறலாம்.
ஆனால் மக்கள் அதை ஜீரணித்துக் கொள்ள மாட்டார்கள் என்பதே நிதர்சனம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

வாஸ்தவமான ஒன்றுதான்!

Views: - 0

0

0