7.5% உள்ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் மாணவர்களையும் இணைக்க கோரி வழக்கு : தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!!!

9 November 2020, 6:52 pm
Madurai HC- Updatenews360
Quick Share

சென்னை : மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீட்டு சட்டத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களையும் இணைக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை அண்மையில் தமிழக அரசு அமல்படுத்தியது. அதன்பேரில், அரசு பள்ளிகளில் பயின்ற தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பை பயிலுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பிரீத்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில், “அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம், அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பு பயில்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சலுகையை அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்,” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கக்கூடிய மிதிவண்டி, லேப்டாப், ஆசிரியர்களுக்கான ஊதியம் உள்ளிட்டவை அனைத்தும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், 7.5% உள்ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் இணைக்காமல் இருப்பது எதிர்பாராத விதமாக இருக்கிறது. எனவே, தங்களையும் இதில் இணைக்க வேண்டும், என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன், மனு தொடர்பாக தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்தனர்.

Views: - 25

0

0

1 thought on “7.5% உள்ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் மாணவர்களையும் இணைக்க கோரி வழக்கு : தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!!!

Comments are closed.