ஓபிஎஸ் எதிர்காலம் இனி என்னவாகும்…? திக்கு திசை தெரியாமல் பரிதவிப்பு! அதிர்ச்சியில் சசிகலா, டிடிவி தினகரன்!

Author: Babu Lakshmanan
23 February 2023, 8:08 pm
Quick Share

கடந்தாண்டு ஜூலை மாதம் 11ம் தேதி சென்னையில் நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லும் என்ற சென்னை ஹைகோர்ட்டின் இரு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் தற்போது உறுதி செய்துள்ளது.

இது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஐ யொட்டி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றிப் பரிசாக தமிழக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து ஓ பன்னீர்செல்வமும் அவருடைய ஆதரவாளர்கள் சிலரும் அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம், சென்னை ஹைகோர்ட்டில் உடனடியாக தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்தார். எனினும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இந்த தீர்ப்புக்கு எதிராக
மேல்முறையீடு செய்தனர்.

இதை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர்
அமர்வு விசாரணை நடத்தி அதிமுக பொதுக்குழு சட்ட விதிகளுக்கு உட்பட்டே கூட்டப்பட்டு இருக்கிறது. எனவே இந்தக் கூட்டமும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும்” என்று கடந்தாண்டு செப்டம்பர் இரண்டாம் தேதி தீர்ப்பு வழங்கியது.

எனினும் ஓ பன்னீர்செல்வம் தரப்பினர் இதை ஏற்கவில்லை. உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கைத்தான் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அமர்வு கடந்த ஜனவரி மாதம் ஒரு வாரம் தீவிர விசாரணை நடத்தி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து இருந்தது.

இந்த வழக்கின் மீதுதான் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அதிமுகவின் ஜூலை 11ந் தேதி பொதுக்குழு கூட்டமும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என்று அதிரடியாக கூறி இருக்கிறது.
தவிர அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த அத்தனை மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தும் உள்ளது.

இது அதிமுகவினருக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் ஒரு தீர்ப்பாகும். ஏனென்றால் பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு இடையே எடப்பாடி பழனிசாமி அதிமுகவை தற்போது முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார்.

அதேநேரம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழக அரசியலில் பலருடைய எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விட்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

ஏனென்றால் இந்த தீர்ப்பு தங்களுக்குத்தான் சாதகமாக வரும் என்று ஓ பன்னீர்செல்வமும் அவருடைய ஆதரவாளர்களும் மனக்கோட்டை கட்டியிருந்தனர். ஆனால் அது அப்படியே நொறுங்கிப் போய் விட்டது.

அதிலும் குறிப்பாக எடப்பாடி பழனிசாமியிடமிருந்து அதிமுகவை கைப்பற்றி நான் மீண்டும் அதிமுக பொதுச்செயலாளர் ஆவேன் என்று சபதம் எடுத்து தமிழகத்தில் சுற்றுலா வந்து கொண்டு இருக்கும் சசிகலா, அவரை இன்று வரை பின்னால் இருந்து இயக்கி வரும் டிடிவி தினகரன் ஆகியோரின் கனவுகளையும் தவிடு பொடியாக்கி விட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் தங்களுக்கு அதிமுகவினரிடம் மிகப்பெரும் செல்வாக்கு இருக்கிறது என்று கடந்த ஆறு ஏழு மாதங்களாக கூறி வந்த இவர்கள் மூவரும் எதிர்வரும் தேர்தல்களில் அதை நிரூபிக்க ஒருங்கிணைந்து போராட வேண்டிய நெருக்கடிக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் இல்லாமல் இவர்களால் ஒரு சிறு துரும்பை கூட அசைக்க முடியாது என்பது வெளிப்படையாக தெரிந்த விஷயம். அதனால் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் மூவரும் ஒன்றாக இணைந்து ஒரு புதிய கட்சியை தொடங்கி 2024 நாடாளுமன்ற தேர்தலிலும், 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

மேலும் இவர்கள் மூவரையும் எடப்பாடி பழனிசாமியுடன் கை கோர்க்க வைத்து அதிமுகவை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர திட்டமிட்டிருந்த ஒரு பிரபல ஆடிட்டருக்கும் இந்தத் தீர்ப்பு பலத்த அடியை கொடுத்திருக்கிறது.

அதைவிட தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் மிகுந்த ஏமாற்றம் அடைந்து இருப்பார்கள் என்பது நிச்சயம்.

இதற்குக் காரணம் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இவர்கள் ஒரு கட்சியின் தலைவராகவே கருதாமலும், அவர் பக்கம் அதிமுகவின் 99 சதவீத தொண்டர்கள் உள்ளனர் என்பதை புரிந்து கொள்ளாமலும்
அதிமுக மூன்று நான்கு அணிகளாக சிதறி கிடக்கிறது என்று தொடர்ந்து மேடைதோறும் இது நாள்வரை கேலி பேசி வந்தனர். இனி அப்படி எடுத்தெறிந்து பேச முடியாது அல்லவா?…

அதேபோல திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் தலைவர்களும் இனி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றியோ, அதிமுக குறித்தோ தனிப்பட்ட முறையில் ஏளனமாக பேசுவதை நிறுத்தியும் கொள்வார்கள். இல்லையென்றால் அதிமுக தரப்பில் இருந்து அவர்களுக்கு தக்க பதிலடி கிடைக்கலாம்.

அதேநேரம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தலைமை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யும் நிலையும் உருவாகி இருக்கிறது. முன்பு போல அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் நாங்கள் பதிவேற்றம் செய்ய இயலவில்லை என்று இனி தேர்தல் ஆணையம் கூறி தப்பித்துக் கொள்ளவும் முடியாது. அதனால் தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியின் துணைத் தலைவர் என்ற அந்தஸ்துடன் எடப்பாடி பழனிசாமியின் அருகில் ஓபிஎஸ் உட்கார முடியாத சூழலும் ஏற்பட்டு இருக்கிறது என்பதும் உண்மை. ஆர் பி உதயகுமார் அந்த இடத்திற்கு வருவார் என்பதும் உறுதியாகி விட்டது. இதை வரும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே கூட பார்க்க முடியும்.

“ஓபிஎஸ் இப்போது தமிழக அரசியலில் தனி மரம் ஆகிவிட்டார். அவர் இனி என்னதான் சட்டப் போராட்டம் நடத்தினாலும் அதற்கு உரிய பலன் கிடைக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான்” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் 2021சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் ஓபிஎஸ் ஆவார். தென் மாவட்டங்களில் தனக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பதாக இப்போது கூறும் ஓபிஎஸ் அந்தத் தேர்தலில் அப்பகுதியில் பிரச்சாரம் செய்யவே செல்லவில்லை. அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் முதலமைச்சர் பதவி தனக்கு கிடைக்காது என்பதால் அவர் ஒதுங்கிக் கொண்டு விட்டார் என்பதுதான் நிஜம். அப்போது முதலே திமுக மீது அவருக்கு கருணை பார்வை பிறந்துவிட்டது.

இரட்டை தலைமை இருப்பதால் கட்சியில் உறுதியான முடிவுகளை எடுக்க முடியவில்லை அதற்கு மிகுந்த தாமதம் ஆகிறது என்ற வாதம் எழுந்தபோது அது பற்றி அவர் கவலைப் படவே இல்லை. அதிமுகவில் தனது ஒருங்கிணைப்பாளர் பதவியை காப்பாற்றிக் கொள்வதில் தான் குறியாக இருந்தாரே தவிர வேறு எதைப் பற்றியும் அவர் சிந்திக்கவில்லை. மேலும் 2017ல் யாரை கட்சியில் சேர்க்கக்கூடாது என்று நிபந்தனை விதித்தாரோ அதே சசிகலாவையும், டிடிவி தினகரனையும் எப்படியாவது அதிமுகவிற்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்றும் உறுதி காட்டினார். இதை அதிமுக தொண்டர்கள் யாரும் விரும்பவில்லை என்பதை ஓபிஎஸ் புரிந்து கொள்ளவே இல்லை.

அதேபோல ஜூலை11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழக அலுவலகத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்து ஓபிஎஸ் நடத்திய அட்டூழிய காட்சிகள் டிவி செய்தி சேனல்களின் நேரலையில் ஒளிபரப்பாகி அதிமுகவினர் இடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையும் ஓபிஎஸ் புரிந்து கொண்டது போல தெரியவில்லை.

இப்படி பல்வேறு வழிகளில் அதிமுகவுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த ஓபிஎஸ்-க்கும் அவரது ஆதரவாளர்கள் சிலருக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியான சாட்டையடி தான். இனி அவருடைய அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்பதை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. அவரை நம்பி சென்றவர்களும் தற்போது திக்கு திசை தெரியாமல் பரிதவிக்கிறார்கள்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Views: - 287

0

0