அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் காலமானார் : அரசியல் தலைவர்கள் இரங்கல்

By: Babu
5 August 2021, 4:28 pm
Quick Share

வயது மூப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருநத அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் இன்று காலமானார்.

முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அவைத்தலைவருமான மதுசூதனன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அதன்பின்னர் வயது முதிர்வு காரணமாக அவர் அரசியல் பணிகளில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

இதனிடையே, மீண்டும் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மதுசூதனன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சுமார் ஒரு மாதமாக அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் மதுசூதனனின் உடலில் பல உறுப்புகள் செயலிழந்து இருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில், இன்று பிற்பகல் 3.42 மணியளவில் சிகிச்சை பலனின்றி மதுசூதனன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 80 வயதான மதுசூதனன் கடந்த 1991ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அரசில் அமைச்சராக பணியாற்றியுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு முதல் தற்போது வரை அதிமுகவின் அவைத் தலைவர் பதவியில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Views: - 246

0

0