விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வாரா முதலமைச்சர் ஸ்டாலின்…? மக்களை மத ரீதியாக வேறுபடுத்தி பார்க்கலாமா..?ஆர்.பி.உதயகுமார் கேள்வி

Author: Babu Lakshmanan
2 September 2023, 11:49 am
Quick Share

இந்து மத நம்பிக்கையுள்ள ஓணம் பண்டிக்கைக்கு வாழ்த்து கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்து பண்டிகையான தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து சொல்ல முன் வருவாரா? என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது;- திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அது அவருடைய உரிமை. அதில் எந்த தவறும் இல்லை, ஆனால், முதல்வர் ஸ்டாலின் என்பவர் எல்லா ஜாதியினருக்கும், எல்லா மதத்தினருக்கும் ,எல்லா கட்சியினருக்கும்  பொதுவானவர். ஆனால் ஹிந்து பண்டிகையான ஓணம் பண்டிகை வாழ்த்து சொன்ன முதல்வர் மற்ற இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்ல முன்வராமல் இருப்பது பாரபட்சம் காட்டுவதாக உள்ளது.

ஒரு முதல்வர் பதவியில் இருந்து கொண்டு மக்களை பிரித்துப் பார்ப்பது, பாரம்பட்சம் பார்ப்பது இப்போது மிகப்பெரிய விவாதமாக கேள்விக்குறியாக இருக்கிறது. ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறியவர் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜைகள் இவைகளுக்கு எல்லாம் தயங்காமல் வாழ்த்து சொல்ல முன் வருவாரா? என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒரு கண்ணில் வெண்ணையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கக் கூடாது.

தமிழ்நாட்டில் முதல்வர் பதவியில் இருந்து கொண்டு பாரபட்சத்தை, வேறுபாட்டை கூடாது முதல்வர் பதவி என்பது ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டிய பதவி, ஒரு முதன்மையான சேவையாற்றி மக்களை பாதுகாக்க மக்களை மகிழ்விக்கதாகும், மக்களை வாழவைக்க வேண்டிய ஒரு முதன்மையான பதவியில் அமர்ந்து கொண்டு பாரபட்சம் காட்ட கூடாது. இந்தியா கூட்டணி என்று நீங்கள் வைத்துக் கொண்டு, அதில் என்ன நீங்கள் சாதிக்க போகிறீர்கள் தமிழ்நாட்டு மக்களுடைய இன்றைய கேள்வியாக இருக்கிறது. 

எதிர்கட்சி தலைவர், கழக பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர் சாமானிய முதல்வராக சரித்திரம் படைத்த புரட்சித்தலைவர் எடப்பாடியார்,  தமிழ்நாட்டு மக்களுடைய நம்பிக்கை நாயகனாக, இன்றைக்கு அவருடைய சேவையினாலே உயர்ந்தது, திட்டங்களை  கொண்டு சேர்த்து, அதன் மூலம் மக்களை வாழவைத்துள்ளார். 

திட்டங்கள் செயல்படுத்துவது மக்களை வாழவைக்க தான். மக்களை வேறுபடுத்தி பார்ப்பது ஜனநாயகம் இல்லை. நீங்கள் உங்கள் தந்தையாரின் பின்புலத்தால் வளர்ந்த காரணத்தால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய மனம் வரவில்லை.  ஆனால் எடப்பாடியார் 50 ஆண்டு பொதுவாழ்வில் கடுமையாக உழைத்து, மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார். மீண்டும் முதலமைச்சராக வந்து புரட்சிகரமான திட்டங்களை மக்களுக்கு வழங்குவார் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

 நீங்கள் வேறுபடுத்தி மக்களின் வெறுப்பை பெற்றுள்ளீர்கள். மும்பை, பாட்னா சென்று சமூக நீதி, திராவிட மாடல் பேசும் நீங்கள், இந்து பண்டிகைகளை, ஒரு விபத்தால் முதலமைச்சரான நீங்கள் வேறுபடுத்தி பார்க்கலாமா?

மக்களிடத்திலே வேறுபாடு காட்டி, விஷ விதையாக விதைத்திருக்கிறாரே முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்ற மக்கள் பேசிக் கொள்கிறார்களே? அதை நீங்கள் கவனத்தில் கொண்டு அதற்கு தீர்வு காண்பீர்களா..? என கூறினார்

Views: - 278

0

0