மீண்டும் கெத்தா ஆட்சிக்கு வருவோம்.. ஜெயலலிதா பல்கலை.,யை திரும்பக் கொண்டு வருவோம்… சிவி சண்முகம் சபதம்..!!

Author: Babu Lakshmanan
31 August 2021, 8:02 pm
CV Shanmugam - Updatenews360
Quick Share

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியமையும் என்றும், அப்போது திமுகவால் முடக்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்ij திரும்பக் கொண்டு வருவோம் என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சபதமிட்டுள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் ஒன்று விழுப்புரத்தில் தொடங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தை தற்போதைய திமுக அரசு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைப்பதாக அறிவித்தது. அதன்படி, ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே எதிர்ப்பு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மெரினா – வாலஜா சாலையில் அமர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், போலீசார் அவர்களை கைது செய்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்று, பிறகு விடுவிக்கப்பட்டனர்.

இதேபோல, விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகமும் தனது ஆதரவாளர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அவரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அறிவிக்கப்பட்டதே தவிர, மேற்கொண்டு அதற்கான எந்த முயற்சியும் அடுத்த எடுக்கவில்லை என்று ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மையாகி விடும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நினைக்கின்றார். விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அரசு அறிவித்தவுடன், அடுத்த 24 மணி நேரத்தில் ஆளுநர் ஒப்புதல் பெற்று, துணைவேந்தர் நியமிக்கப்பட்டார் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

அதைத் தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடைமுறைகள் செயல்பாட்டுக்கு வந்தது. இதனால் தான் பல்கலைக்கழக விஷயத்தில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஆனால், அதிமுக அரசு இன்னும் ஒரு பத்து நாட்கள் நீடித்திருந்தால், ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி இருப்போம். இருப்பினும், விழுப்புரத்தில் ஆவின் நிலையம் அருகே 10 ஏக்கர் நிலத்தையும், செங்காடு கிராமத்தில் 70 ஏக்கர் இடத்தையும் ஜெயலலிதா பல்கலைக்கழகம் நிறுவுவதற்காக, நாங்கள் தேர்வு செய்து வைத்திருந்தோம். இதனை முழுமையாகச் செயல்படுத்தும் வரை ஆட்சி நீடிக்கவில்லை.

திருவெண்ணெய்நல்லூரில் அரசு கலைக் கல்லூரி திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த கல்லூரியை அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் செயல்படுத்தியது. அதுபோல, ஒரு அரசினுடைய திட்டத்தைப் புதிதாக வருகின்ற அரசு முடக்கக்கூடாது. அதனை, தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். மேலும், அதிமுக ஆட்சியில் விழுப்புரம் நகரத்தில் 5 ஏக்கர் பரப்பளவில், ரூ. 50 கோடி மதிப்பீட்டில் டைட்டில் பார்க் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. திமுக அரசு மக்கள் விரோத அரசு அதுவும், இன்றைக்கு விழுப்புரம் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில், புதுச்சேரி எல்லையை ஒட்டி அமைப்பதற்கு, அரசு முன்வந்துள்ளது. இதனால் புதுச்சேரி மாநில இளைஞர்களுக்குப் பயனாக இருக்குமே தவிர, விழுப்புரம் மாவட்ட இளைஞர்களுக்குப் பயனாக இருக்காது. திமுக அரசு மக்கள் விரோத அரசாகச் செயல்படுகிறது. மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறி வருகிறது.

எனவே, இந்த ஆட்சி இன்னும் எத்தனை நாள் நீடிக்கும் எனத் தெரியவில்லை. ஐந்து ஆண்டுகள் முடிந்ததும் தேர்தல் வரும், அப்போது அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும். அப்போது விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தைத் திட்டமிட்டபடி மிகச் சிறப்பாக நடத்த நாங்கள் நடவடிக்கை எடுப்போம், என தெரிவித்துள்ளார்.

Views: - 218

0

0