அன்று அணில்… இன்று பாம்பு… மீண்டும் மின்வெட்டுக்கான அமைச்சரின் புதிய காரணம் : கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!

Author: Babu Lakshmanan
16 August 2021, 1:20 pm
senthil balaji - snake - updatenews360
Quick Share

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின்வெட்டு என்பது மீண்டும் வாடிக்கையாகி விட்டது. ஊரடங்கு முடியும் வரையில் மின்வெட்டு ஏற்படாது என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். ஆனால், தமிழகத்தில் மின்வெட்டு தவிர்க்க முடியாததாகி விட்டது. பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் ஏற்படும் மின்வெட்டு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலராஜி கூறிய காரணம் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியது. அதாவது, மின்கம்பிகளில் அணில்கள் செல்வதால், உரசல் ஏற்பட்டு மின்தடை ஏற்படுவதாக தெரிவித்தார். அமைச்சரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

twitter squirrel - updatenews360

மேலும், ஆளும் கட்சி கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் அமைச்சரின் பேச்சுக்கு ஆதரவாக முட்டுக் கொடுத்து வருகின்றனர். இருப்பினும், விமர்சனங்களை அமைச்சர் செந்தில் பாலாஜியால் எதிர்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. குறிப்பாக, அணில் புகைப்படத்தையும், மின்கம்பிகளையும் வைத்து மீம்ஸ்களை நெட்டிசன்கள் தெறிக்க விட்டனர். கடந்த ஆட்சியில் இல்லாத அணில், எலி எல்லாம் இந்த மே மாதத்திற்கு பிறகு தமிழகத்திற்குள் படையெடுத்து விட்டதாகவும் விமர்சனம் செய்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து, திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்தும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை மற்றும் பட்ஜெட் உள்ளிட்ட காரணங்களினால், அமைச்சர் செந்தில் பாலாஜியையும், அணிலையும் நெட்டிசன்களும், பொதுமக்களும் மறந்திருந்தனர்.

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் சென்னிமலை வட்டாரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டது. ஈங்கூர் – திங்களுர் 110 கி.வா. துணை மின் நிலையத்தில் கோளாறு என்ன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனையின் முடிவில் மின்வெட்டுக்கு காரணம் பாம்பு எனக் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டுவிட்டர் பக்கத்தில் போட்டுள்ளார்.
அதோடு, ஊழியர் ஒருவர் பாம்பின் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டிருந்தார்.

வெறும் வாய்க்கு அவுள் கிடைத்தது என்பதைப் போல, நெட்டிசன்களுக்கு மேலும் ஒரு கண்டென்ட்டை அமைச்சர் செந்தில் பாலாஜியே கொடுத்து விட்டதாக கூறி, மீண்டும் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கி வைத்துள்ளனர்.

Views: - 507

0

0