அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ‘வின்னர்’ விவகாரத்தில் திடீர் திருப்பம் : கண்ணனுக்கு முதல் பரிசு வழங்க தடை

29 January 2021, 5:09 pm
jallikattu-alanganallur - updatenews360
Quick Share

மதுரை : அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட கண்ணனுக்கு முதல் பரிசை வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் ஹரிகிருஷ்ணனுக்கு பதிலாக கண்ணன் என்பவர் விளையாடி முதல் பரிசை வென்றதாக குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 33 என்கிற எண் கொண்ட பனியனை வைத்து 4 சுற்றில் ஹரிகிருஷ்ணன் என்கிற மாடுபிடி வீரர் விளையாடினார். ஹரிகிருஷ்ணன் 4 ஆம் சுற்று வரை 7 காளை அடக்கி முன்னிலையில் இருந்த நிலையில், அவர் காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

ஹரிகிருஷ்ணன் பனியனை அவருடைய நண்பர் கண்ணனுக்கு கொடுத்ததால் 5 ஆம் சுற்றிலிருந்து பங்கேற்ற கண்ணன் 6 காளைகளை பிடித்தார். ஒட்டுமொத்தமாக இருவரும் 13 காளைகளை பிடித்ததால் 5 இலட்சம் மதிப்பிலான கார் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இருவரும் சேர்ந்து ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசான காரை பெற்றுள்ளதாக, 2 ஆம் இடம் பெற்ற மாடுபிடி வீரர் கருப்பண்ணன் புகார் அளித்தார். அதனடிப்படையில், மதுரை மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் மதுரை கோட்டாச்சியர் முருகானந்தத்தை விசாரிக்க உத்தரவு பிறப்பித்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள், ஆவணங்களை ஆய்வு செய்தும், நேரில் விசாரணை நடத்தியும் அறிக்கை தயாரித்து நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

அதில், ஆள்மாறாட்டம் செய்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட கண்ணனுக்கு முதல் பரிசை வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளது. வெற்றியாளருக்கு முதலமைச்சர் பழனிசாமி சார்பில் நாளை கார் பரிசாக வழங்க இருந்த நிலையில், இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆள்மாறாட்டம் உறுதியானதால் 2வது இடம் பிடித்த கருப்பண்ணன் வெற்றியாளராக விரைவில் அறிவிக்கப்படுவார் என தெரிகிறது.

Views: - 0

0

0