மனஉளைச்சலில் மாணவர்கள்… ஆசிரியர் தேர்வு வாரியம் இருப்பதே Waste : தமிழக அரசு மீது அன்புமணி ராமதாஸ் காட்டம்!!

Author: Babu Lakshmanan
26 December 2022, 1:26 pm
Quick Share

சென்னை ; அரசு பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம் முழுநேர தலைவர் இல்லாமல் முடங்கிக் கிடப்பதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கடந்த காலங்களில் இல்லாத வகையில் இப்போது ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் சூழலில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக பணியாற்றி வந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஜி.லதா, கடந்த செப்டம்பர் 23ம் தேதி மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகிச் சென்றார். அவருக்கு மாற்றாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமாருக்கு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி ஆணையர் பதவியே பணிச்சுமை நிறைந்தது. அத்தகைய பதவியில் உள்ள அதிகாரியால் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பணியை கவனித்துக் கொள்ள முடியாது. அதனாலும், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் போதிய எண்ணிக்கையில் அதிகாரிகளும், பணியாளர்களும் இல்லாததால், அதன் செயல்பாடுகள் கடந்த சில மாதங்களாக முடங்கிக் கிடக்கின்றன.

ஆசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகள் கடந்த மார்ச் 7-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. அதன்பின்னர் 10 மாதங்களாகி விட்ட நிலையில், இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான முதல் தாள் தேர்வு மட்டுமே நடத்தப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கான இரண்டாம் தாளுக்கான தேர்வு தேதி கூட இன்று வரை அறிவிக்கப்படவில்லை. மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட இத்தேர்வுக்கு ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன் பின் 8 மாதங்களாக தகுதித்தேர்வை நடத்தாமல் இருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. அதனால், தகுதித் தேர்வின் இரண்டாம் தாளை எழுத விண்ணப்பித்து விட்டு காத்திருக்கும் 4 லட்சம் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

அதேபோல், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 5154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று 23.06.2022 அன்று தொடக்கக் கல்வித் துறை அறிவித்தது. ஆனால், அதன்பின் 6 மாதங்களுக்கு மேலாகியும் அதற்கான அறிவிக்கை கூட இன்னும் வெளியிடப்படவில்லை. ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது கணக்கிடப்பட்டு ஓராண்டாகியும் அந்த பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என்றால், ஆசிரியர் தேர்வு வாரியம் என்ற அமைப்பு இருப்பதில் அர்த்தமே இல்லை. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிக்கை கடந்த 09.09.2021 அன்று வெளியிடப் பட்டது. அதன்படியான ஆசிரியர்கள் நியமனம் கடந்த நவம்பர் மாத இறுதியில் தான் நிறைவடைந்தது.

இ.ஆ.ப., இ.கா.ப. பணிகளுக்காக குடிமைப்பணி தேர்வுகளே அறிவிக்கை வெளியான நாளிலிருந்து 11 மாதங்களில் நடத்தி முடிக்கப்படும் நிலையில், ஆசிரியர் பணிக்கான தேர்வுகளை நடத்தி முடிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் 15 மாதங்கள் எடுத்துகொள்வது எப்படி சரியாகும்? இந்த தாமதம் போக்கப்பட வேண்டும், என வலியுறுத்தியுள்ளார்.

Views: - 308

0

0